படப்பை அருகே பரிதாபம்: கட்டுமான பணியில் ‘லிப்ட்’ சரிந்து விழுந்து என்ஜினீயர் பலி

படப்பை அருகே தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டு வரும் வீடுகள் கட்டுமான பணியில் ‘லிப்ட்’ சரிந்து விழுந்ததில் என்ஜினீயர் பலியானார்.

Update: 2021-02-13 04:36 GMT
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சாலமங்கலம் சிறுமாத்தூர் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. அதில் 10 பிளாக்குகளில் மொத்தம் 420 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.

அதில் ஒவ்வொரு பிளாக்கிற்கும் 42 வீடுகள் என கட்டப்பட்டு வருகின்றனர். இந்த கட்டுமான பணிகளை சென்னையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனம் கட்டி வருகிறது. அந்த நிறுவனத்தில் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் தத்தளூர் பெரிய தெரு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவருடைய மகன் வேதகிரி (வயது 26) என்பவர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கட்டுமான பொருட்களை மாடிக்கு கொண்டு செல்வதற்கான லிப்ட் அமைப்பதற்கான பணியில் இவர் மற்றும் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வளத்தி கிராமம் மேட்டு தெருவைச் சேர்ந்த அய்யனார் (39) ஆகியோர் 4-வது மாடியில் நேற்று வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது லிப்ட் மேலே இருந்து திடீரென சரிந்தது. அப்போது லிப்ட்டை பிடித்துக்கொண்டிருந்த வேதகிரி தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதில் பலத்த காயமடைந்து, மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்த அவரை தொழிலாளிகள் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்