ஜெயங்கொண்டம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட வாய்ப்பு
ஜெயங்கொண்டம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தே.மு.தி.க. கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.;
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றிய தே.மு.தி.க. சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம் தா.பழூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கினார். மாநில கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் விஜயகண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வருகிற சட்டமன்ற தேர்தலில் செயல்பட வேண்டிய விதம் குறித்து தொண்டர்களிடம் எடுத்து கூறினார். அப்போது, தே.மு.தி.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தாலும், கூட்டணி இல்லாமல் தேர்தலில் தனித்து களம் கண்டாலும், அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். இந்த தேர்தலில் நமது பலத்தை நிரூபிக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியை பொறுத்த அளவில் தற்போது நமது கட்சியை வழி நடத்திக்கொண்டிருக்கும் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே அவரை வெற்றிபெறச் செய்வதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும், என்றார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ராம.ஜெயவேல், அரியலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் ஆனந்தன், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் ஜேக்கப் ஜெராமியஸ் உள்ளிட்ட பல்வேறு அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.