பூட்டை உடைத்து எலக்ட்ரிக்கல் கடையில் பணம் திருடியவர் கைது

தா.பழூரில் பூட்டை உடைத்து எலக்ட்ரிக்கல் கடையில் பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2021-02-14 01:09 IST
செல்வம்
தா.பழூர்:

பணம் திருட்டு
அரியலூர் மாவட்டம் தா.பழூர் கடைவீதியில் போலீஸ் நிலையம் அருகே எலக்ட்ரிக்கல் கடை உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.10 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. மேலும் அருகில் உள்ள பாத்திரக்கடையில் திருட்டு முயற்சி நடந்தபோது, கடையின் உரிமையாளர் வந்ததால், மர்ம நபர் தப்பிச்சென்றார். இந்த சம்பவம் தா.பழூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு, போலீசார் தீவிர விசாரணை நடத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, கொள்ளிடம் ஆற்றின் கரையில் தா.பழூர் அருகே அடிக்காமலை பகுதியில் உள்ள மதுரை வீரன் கோவில் பகுதியில் பதுங்கியிருந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த பெரியவளையம் கிராமத்தை சேர்ந்த செல்வம்(வயது 42) என்பதும், தற்போது அவர் தஞ்சை மாவட்டம் தேவனாஞ்சேரி அருகில் உள்ள ஆனூர் கிராமத்தில் குடும்பத்தோடு வசித்து வருவதும், தெரியவந்தது.
கைது
மேலும் அவரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், தா.பழூர் கடைவீதியில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையில் ரூ.10 ஆயிரத்தை திருடியது மற்றும் பாத்திரக்கடையில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டது அவர்தான் என்பதும், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு பலமுறை அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டதும், கையில் பணம் இல்லாத போது ஏதாவது கடையின் பூட்டை உடைத்து பணம் திருடுவதை அவர் வழக்கமாக கொண்டிருந்ததும், விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரை ஜெயங்கொண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி வழக்கை விசாரித்து, செல்வத்தை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி அவரை சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்றனர்.
திருட்டு சம்பவங்கள் குறித்து...
கடந்த ஓரிரு மாதங்களில் அரியலூர் மாவட்டத்தில் மட்டும் 28 இடங்களில் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த சம்பவங்கள் குறித்தும் செல்வத்திடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. தா.பழூர் பகுதியில் திருட்டு நடந்த 2 நாட்களில், திருட்டில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீசாருக்கு, வியாபாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்