ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிடுவது யார்? அ.தி.மு.க.-கூட்டணி கட்சிகளுக்கு இடையே போட்டாபோட்டி

ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிடுவது யார்? என்பதில் அ.தி.மு.க.-கூட்டணி கட்சிகளுக்கு இடையே போட்டாபோட்டி ஏற்பட்டுள்ளது.;

Update:2021-02-14 01:50 IST
ஜெயங்கொண்டம்:

2,66,013 வாக்காளர்கள்
அரியலூர் மாவட்டத்தில் உள்ள 2 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று ஜெயங்கொண்டம். இந்த தொகுதியை பொறுத்தவரை ஜெயங்கொண்டம், தா.பழூர் என 2 ஊராட்சி ஒன்றியங்களின் பகுதிகளும், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தின் முழுப்பகுதியும் அடங்கி உள்ளன.
இந்த தொகுதியில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 663 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 34 ஆயிரத்து 347 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 3 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 66 ஆயிரத்து 13 வாக்காளர்கள் வருகிற சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 289 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த தேர்தல்களில் வெற்றி விவரம்
1,952-ம் ஆண்டில் இருந்து 2016-ம் ஆண்டு வரை நடைபெற்ற 15 சட்டமன்ற தேர்தல்களில் இந்த ெதாகுதியில் தி.மு.க. 5 முறையும், அ.தி.மு.க. 4 முறையும், காங்கிரஸ் கட்சி 4 முறையும், பா.ம.க. ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சை வேட்பாளர் கே.ஆர். விஸ்வநாதன் (1952 தேர்தல்) ஒரு முறை வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஜே.கே.என்.ராமஜெயலிங்கம் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். அவரை எதிர்த்து பா.ம.க. சார்பில் போட்டியிட்ட வன்னியர் சங்க மாநில தலைவராக இருந்த மறைந்த ஜெ.குரு 2-வது இடத்தை பிடித்தார். தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். 
போட்டியிட தயாராகும் பிரமுகர்கள்
வருகிற சட்டமன்ற தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அ.தி.மு.க. சார்பில், தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் மீண்டும் இத்தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி, அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இதேபோல் முன்னாள் மேல்சபை எம்.பி.யும், மாவட்ட செயலாளராக இருந்தவருமான இளவரசன், ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிட தீவிரம் காட்டி வருகிறார். மேலும் முன்னாள் மாவட்ட செயலாளர் கவிதா ராஜேந்திரன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ரீடு செல்வம், ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் தங்கபிச்சமுத்து, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் அறிவு என்கிற சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோரும் ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிட சீட் பெறுவதற்கான முனைப்பில் உள்ளனர்.
தி.மு.க.வை பொறுத்தவரை கடந்த 3 சட்டமன்ற தேர்தல்களில் கூட்டணி கட்சிக்கு சீட் கொடுத்து தொகுதியை இழந்த நிலையில், இந்த முறை கூட்டணி கட்சியை தவிர்த்து தி.மு.க.வே போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தா.பழூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் க.சொ.க.கண்ணன், தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக  நிர்வாகிகள் தரப்பில் கூறுகின்றனர். மேலும் ஜெயங்கொண்டம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் தனசேகரும் இத்தொகுதியில் போட்டியிட முனைப்பு காட்டி வருகிறார்.
பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க., அ.ம.மு.க.
இத்தொகுதி வன்னியர் சமுதாய மக்கள் நிறைந்த பகுதி என்பதால் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க., இத்தொகுதியை கேட்டுப்பெறும் என்று அக்கட்சியினரால் பேசப்படுகிறது. கூட்டணியில் பா.ம.க.வுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டால், இங்கு அக்கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட வேண்டும் என்று பா.ம.க.வினர் அவருக்கு அழைப்பு விடுத்து விருப்பம் தெரிவித்துள்ளனர்.  
அவருக்கு அடுத்தபடியாக மாநில செயற்குழு உறுப்பினர் எம்.கே.ஆர்.ராஜேந்திரன், வன்னியர் சங்க மாநில செயலாளர் வைத்தி, பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் திருமாவளவன் ஆகியோரும் அந்த வரிசையில் உள்ளனர்.
இதேபோல் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க. இந்த முறை தங்களுக்கு ஜெயங்கொண்டம் தொகுதியை ஒதுக்கி தர வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகிறது. அதன்படி இந்த தொகுதி பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டால், அக்கட்சியின் மாவட்ட தலைவர் அய்யப்பன் மற்றும் பா.ஜ.க. ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி பிரிவின் மாவட்ட தலைவர்  இளையராஜா ஆகியோர் போட்டியிட தீவிரமாக கட்சி பணியில் ஈடுபட்டு வருகிறார் கள் என்பது குறிப்பிடத்தக்கது. தே.மு.தி.க. சார்பில் இந்த தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ள அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். இதனால் இந்த தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு இடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. அ.ம.மு.க. சார்பில் ஜெ.கொ.சிவா, ஓய்வு பெற்ற அரசு டாக்டர் ஜெயராமன், தேவா என்கின்ற தேவேந்திரன், வீரபோகம் கோகுல் ஆகியோர் சீட் வாங்க போட்டி போடுகின்றனர்.

மேலும் செய்திகள்