வேடசந்தூர் அருகே கஞ்சா விற்ற தந்தை, மகன் உள்பட 4 பேர் கைது

வேடசந்தூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்ற தந்தை, மகன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 11 கிலோ கஞ்சா, ரூ.11 லட்சம், லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-02-16 15:01 GMT
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்ற தந்தை, மகன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 11 கிலோ கஞ்சா, ரூ.11 லட்சம், லாரி பறிமுதல் செய்யப்பட்டது. 
கஞ்சா பதுக்கல்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்திநகரை சேர்ந்தவர் சவுந்திரபாண்டி (வயது 45). இவர் மீது ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் கஞ்சா விற்றதாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் அவரும் அந்த வழக்குகளில் தலைமறைவாக இருந்து வந்தார். போலீசார் அவரை வலைவீசி தேடி வந்தனர். 
இந்தநிலையில் சவுந்திரபாண்டி, வேடசந்தூர் அருகே உள்ள நவாமரத்துப்பட்டியில் ஒரு வீட்டை விலைக்கு வாங்கி, அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்துவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் நேற்று நவாமரத்துப்பட்டியில் சோதனை நடத்தினர். 
4 பேர் கைது
அப்போது சவுந்திரபாண்டி ஒரு வீட்டில் 11 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த சவுந்திரபாண்டியை போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக இருந்த அதே பகுதியை சேர்ந்த பெருமாள் (51), அவரது மகன் சுபாஷ் (21) மற்றும் கஞ்சா வாங்க வந்த திண்டுக்கல் என்.எஸ்.நகரை சேர்ந்த சுந்தரபாண்டி (31) ஆகியோரை பிடித்து, வேடசந்தூர் போலீசில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். 
பின்னர் வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுந்திரபாண்டி உள்பட 4 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 11 கிலோ கஞ்சா மற்றும் ரூ.10 லட்சத்து 98 ஆயிரம், மினி லாரி, 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்