காட்டுமன்னார்கோவில் அருகே அரசு பள்ளி கொடிக்கம்பத்தில் வன்னியர் சங்க கொடி ஏற்றப்பட்டதால் பரபரப்பு

காட்டுமன்னார்கோவில் அருகே அரசு பள்ளி கொடிக்கம்பத்தில் வன்னியர் சங்க கொடி ஏற்றப்பட்டதால் பரபரப்பு

Update: 2021-02-16 17:46 GMT
காட்டுமன்னார்கோவில், 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கஞ்சங்கொல்லை கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 339 மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். தலைமை ஆசிரியர் உள்பட 16 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
நேற்று காலை ஆசிரியர்களும், மாணவர்களும் வழக்கம்போல் பள்ளிக்கு வந்தனர். அப்போது பள்ளி வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் வன்னியர் சங்க கொடி ஏற்றப்பட்டிருந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் இதுபற்றி காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். 

இதற்கிடையே பள்ளிக்கு வந்த மாணவர்களில் ஒருதரப்பினர் வன்னியர் சங்க கொடியை இறக்குமாறும், மற்றொரு தரப்பினர் கொடியை இறக்கக்கூடாது எனவும் ஆசிரியர்களிடம் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் மாணவர் ஒருவர் காயமடைந்தார். அந்த சமயத்தில் அங்கு வந்த போலீசார் பள்ளியில் ஏற்றப்பட்ட வன்னியர் சங்க கொடியை கீழே இறக்கினர். அதன்பிறகு மோதலில் காயமடைந்த மாணவர் உள்பட இருதரப்பை சேர்ந்த 6 மாணவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்