நிலக்கடலை செடிகளில் பூச்சி தாக்குதல்
தா.பழூர் பகுதியில் நிலக்கடலை செடிகளில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.;
தா.பழூர்:
பூச்சி தாக்குதல்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதியில் தா.பழூர், சிந்தாமணி, கோடங்குடி, அணைக்குடம், பொற்பொதிந்தநல்லூர், அங்கராயநல்லூர், தேவாமங்கலம், உதயநத்தம், சோழமாதேவி, கோடாலிக்கருப்பூர், இடங்கண்ணி, காரைக்குறிச்சி, இருகையூர், கார்குடி, நாயகனைப்பிரியாள் ஆகிய ஊராட்சிகளில் சுமார் ஆயிரத்து இருநூறு ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். காலம் கடந்து பெய்த பருவ மழையால் விதைத்த விதைகள் சரியாக முளைக்கவில்லை.
இதனால் பல விவசாயிகள் இரண்டாவது முறையாக விதை விதைத்தனர். தற்போது செடிகள் நன்கு வளர்ந்து வந்த நிலையில் நிலக்கடலை செடிகளில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளது.
ஆலோசனை வழங்க வேண்டும்
மாலை நேரங்களில் கருப்பு நிறத்தில் இருக்கும் நுண்பூச்சிகள் கூட்டம், கூட்டமாக இலைகளில் அமர்ந்து செடிகளை அழிக்கின்றன. இதனால் கவலையடைந்துள்ள விவசாயிகள் பூச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நிலக்கடலை வயல்களில் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி, பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.