மானிய விலையில் மாடி தோட்ட இடு பொருட்கள்

வீடுகளின் மாடியில் காய்கறி சாகுபடி செய்ய உதவும் விதை, பை, உரம், சொட்டு நீர் பாசன அமைப்பு ஆகியவை மானிய விலையில் வழங்கப்படுகிறது.

Update: 2021-02-16 20:43 GMT
மதுரை, பிப்
வீடுகளின் மாடியில் காய்கறி சாகுபடி செய்ய உதவும் விதை, பை, உரம், சொட்டு நீர் பாசன அமைப்பு ஆகியவை மானிய விலையில் வழங்கப்படுகிறது.
இது குறித்து மதுரை தோட்டக் கலை துறை கிழக்கு வட்டார உதவி இயக்குனர் புவனேஸ்வரி கூறியதாவது:-
மாடித் தோட்டம்
மதுரை மாவட்ட கிழக்கு வட்டாரத்தில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்க திட்டம் 2020-2021ம் ஆண்டின் கீழ் வீட்டுத் தோட்டம் அமைப்பதற்கு 40 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. வீட்டுத் தோட்டம் அமைக்க வழங்கப்படும் ஒரு தளையில் செடி வளர்க்க உதவும் 6 பாலிதீன் பைகள், 2 கிலோ எடையுள்ள 6 தென்னை நார்க்கழிவு கட்டிகள், காய்கறி விதைப் பாக்கெட்டுகள் 6, அசோஸ்பைரில்லம், சூடோமோனஸ், பாஸ்போ பாக்டீரியா, டிரைக்கோடெர்மாவிரிடி, வேம்பு பூச்சி கொல்லி 100 மிலி ஆகியவை இடம் பெறும்.
ஒரு பயனாளி 2 தளைகள் வீதம் அதிகபட்சமாக 12 தளைகள் வாங்கிக் கொள்ளலாம். மேற்கண்ட வீட்டுத் தோட்ட பொருட்கள் அடங்கிய ஒரு தளையின் மதிப்பு ரூ.850 ஆகும். இதில் அரசு மானியமாக ரூ.340 வழங்கப்படுகிறது. இதன் மூலம் பயனாளிகள் ரூ.510 செலுத்தினால் போதும்.
சொட்டு நீர் பாசனம்
வீட்டு காய்கறி தோட்டம் அமைக்கும் போது அதில் சொட்டு நீர் பாசன வசதி அமைக்க 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இந்த சொட்டு நீர் பாசன அமைப்பின் முழு விலை ரூ.1120 ஆகும். இதில் அரசு மானியமாக ரூ.400 வழங்கப்படும். இதன் மூலம் பயனாளிகள் ரூ.720 செலுத்தி சொட்டு நீர் பாசன அமைப்பை நிறுவிக் கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் பயன் பெற விரும்புவோர் தங்கள் குடும்ப அட்டை நகல், ஆதார் கார்டு நகல், வங்கிக் கணக்கு விவரம் நகல் ஆகியவற்றுடன் கிழக்கு வட்டார தோட்டக்கலை அலுவலகத்தில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்