சட்டமன்ற பேரவை பொதுக்கணக்கு குழுவினர் ஆய்வு

கடலூர் மாவட்டத்தில் சட்ட பேரவை பொதுக்கணக்கு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2021-02-16 21:50 GMT
கடலூர், 

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக்கணக்கு குழு தலைவர் (பொறுப்பு) பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ. தலைமையில் பொதுக்கணக்கு குழு உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.க் கள் ராமச்சந்திரன் (குன்னம்), உதயசூரியன் (சங்கராபுரம்), நடராஜ் (மயிலாபூர்), டாக்டர் பரமசிவம் (வேடச்சந்தூர்) பி.வி.பாரதி (சீர்காழி), ராஜா (மன்னார்குடி), இணைச்செயலாளர் பத்மகுமார், துணை செயலாளர் ரேவதி, அரசு சட்டமன்ற பேரவை பொதுக்கணக்கு குழு அலுவலர்கள் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் தணிக்கை ஆய்வு மேற்கொண்டனர்.
அரசு சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன், மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் சபா.ராஜேந்திரன் (நெய்வேலி), கணேசன் (திட்டக்குடி), துரை.கி.சரவணன் (புவனகிரி) ஆகியோரும் பங்கேற்றனர்.

தணிக்கை

இதில் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை தலைவரின் 2011-2012 முதல் 2016-2017 வரையிலான ஆண்டுகளுக்கான அறிக்கைகளில் (உள்ளாட்சி அமைப்புகள், வருவாய்ப் பிரிவு தணிக்கை, பொது மற்றும் சமூகப்பிரிவு தணிக்கை, பொருளாதார பிரிவு தணிக்கை, மாநில நிதி நிலை உள்ளிட்ட தணிக்கைப்பத்திகள்) குறித்து ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை, சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மை துறை, பதிவுத்துறை, பள்ளிக்கல்வித்துறை, தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகள் குறித்து தணிக்கை ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.
இது பற்றி தமிழ்நாடு சட்டமன்ற பேரவை குழுவினர் கூறுகையில், பல்வேறு காரணங்கள் மற்றும் புகார்களால் நிலுவையில் உள்ள பணிகளை சரி செய்யவும், அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியை சரிவர பயன்படுத்தி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி மக்களின் பயன்பாட்டிற்கு உரிய நேரத்தில் கொண்டு வரவும் அனைத்துத்துறை முதன்மை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் மக்களுக்கு தேவையான புதிய திட்டங்களை தயார் செய்து அரசுக்கு பரிந்துரை செய்யவும் அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்தனர்.

பஸ் நிலையம்

ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கார்த்திகேயன், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை (பொறுப்பு) திட்ட இயக்குனர் காஞ்சனா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மல்லிகா, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ரவி மனோகர், மின்துறை கண்காணிப்பு பொறியாளர் சத்திய நாராயணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) பரி மளம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து இந்த குழுவினர் நெல்லிக்குப்பம் பஸ் நிலையத்தை ஆய்வு செய்து, பஸ்கள் உள்ளே வந்து செல்ல நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். தொடர்ந்து குடிதாங்கி எண்ணெய் பனை வயல், சித்தரசூர் கிராமத்தில் கொய்யா நெருங்கிய நடவு, அண்ணாகிராமத்தில் ஆதிதிராவிடர் பள்ளி விடுதிகளையும் ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பித்தனர்.

மேலும் செய்திகள்