சேலம் அருகே பாஸ்டேக் கட்டண முறையால் சுங்கச்சாவடி ஊழியர்கள்- வாகன ஓட்டிகளிடையே வாக்குவாதம்

சேலம் அருகே பாஸ்டேக் கட்டண முறையால் சுங்கச்சாவடி ஊழியர்கள்- வாகன ஓட்டிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Update: 2021-02-17 00:09 GMT
கருப்பூர்,


நாடு முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் கட்டண முறை கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்தது. பாஸ்டேக் பயன்படுத்தாத வாகனங்களுக்கு 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதற்காக நேற்று காலை சுங்கச்சாவடி, பெட்ரோல் நிலையங்களில் பாஸ்டேக் வாங்க வாகன ஓட்டிகள் பலர் கூடினர். சேலம் அருகே கருப்பூரில் உள்ள சுங்கச்சாவடியில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பாஸ்டேக் முறை நடைமுறைக்கு வந்தது. இதையொட்டி பாஸ்டேக் இல்லாத வாகன ஓட்டிகளுக்கு 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளுக்கும், சுங்கசாவடி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சலுகை

கருப்பூர் சுங்கச்சாவடியில் சேலம் மாவட்டம் பதிவு எண் கொண்ட உள்ளூர் வாகனங்களுக்கு சலுகை உண்டு. அதாவது கார் வைத்திருப்பவர்கள் ரூ.15 மட்டுமே செலுத்தி இந்த சுங்கச்சாவடியை கடந்து சென்று வந்தனர். ஆனால் நேற்று பாஸ்டேக் இல்லாத உள்ளூர் கார்களுக்கு, அபராத கட்டணத்துடன் ரூ.150 செலுத்திய பின்னரே அனுமதித்தனர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். 

அதேபோன்று 20 கிலோ மீட்டருக்குள் சாலையை பயன்படுத்தும் உள்ளூர் மினி கனரக வாகனங்கள் ஒரு நாளைக்கு ரூ.15 செலுத்தி வந்தனர். ஆனால் தற்போது அபராத தொகையுடன் ரூ.270 வசூலிக்கப்படுகிறது. அதே போல ரூ.435 கட்டணம் செலுத்திய லாரி, கன்டெய்னர் லாரி போன்ற கனரக வாகனங்களுக்கு தற்போது அபராதத்துடன் ரூ.870 வசூலிக்கப்படுகிறது. இந்த அதிக தொகை காரணமாக வாக்குவாதங்கள் ஏற்பட்டன. 

திருப்பி அனுப்பப்பட்டன

மேலும் நேற்று பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டாமல் வந்த உள்ளூர் வாகனங்கள் சில திருப்பி அனுப்பப்பட்டன. இதுகுறித்து சுங்கச்சாவடி அதிகாரிகள் கூறும் போது, நீண்ட தூரம் பயணிக்கும் வாகனங்கள் 80 சதவீதம் பாஸ்டேக் கட்டண முறையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சேலம் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி பஸ்கள், கார்கள் பாஸ்டேக் எடுக்காமல் பயன்படுத்தி வருகிறார்கள். இனி உள்ளூர் வாகனங்கள் பாஸ்டேக் இருந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என்றனர்.

இதே போன்று சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பட்டி, வைகுந்தம் ஆகிய பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் பாஸ்டேக் கட்டண முறை அமல்படுத்தப்பட்டது. அந்த வழியாக பாஸ்டேக் இல்லாமல் சென்ற வாகனங்களுக்கு 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் வாகனஓட்டிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். இதன் காரணமாக அனைத்து சுங்கச்சாவடிகளிலும் நேற்று பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்