தமிழகம் முழுவதும் அரசு துறை சார்ந்த தேர்வுகளை 1,37,721 பேர் எழுதுகிறார்கள்- டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்

தமிழகம் முழுவதும் அரசு துறை சார்ந்த தேர்வுகளை 1 லட்சத்து 37 ஆயிரத்து 721 பேர் எழுதுகிறார்கள் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

Update: 2021-02-17 00:53 GMT
ஈரோடு,
தமிழகம் முழுவதும் அரசு துறை சார்ந்த தேர்வுகளை 1 லட்சத்து 37 ஆயிரத்து 721 பேர் எழுதுகிறார்கள் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு
அரசு துறையில் பணியாற்றி வருபவர்களில் பதவி உயர்வுக்காக துறை சார்ந்த தேர்வுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தி வருகிறது. இந்த தேர்வு ஈரோட்டில் நேற்று 2 மையங்களில் நடந்தது. இதனை பார்வையிடுவதற்காக டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன் ஈரோட்டுக்கு வந்தார். அவர் ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள சார்நிலை கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள தேர்வு உபகரணங்களை ஆய்வு செய்தார். அதன்பிறகு ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நடந்த தேர்வை அவர் பார்வையிட்டார்.
பின்னர் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலசந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
1,37,721 பேர்
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 152 வகையான துறை சார்ந்த தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வுகள் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது தேர்வுகள் நடத்தப்படுகிறது. கடந்த 14-ந் தேதி தொடங்கிய தேர்வுகள் 21-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 54 ஆயிரத்து 161 பேர் தேர்வை எழுதி வருகின்றனர். 152 துறை சார்ந்த தேர்வை மொத்தம் 1 லட்சத்து 37 ஆயிரத்து 721 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
ஈரோட்டில் அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடம், வள்ளலார் மெட்ரிக் பள்ளிக்கூடம் ஆகிய மையங்களில் தேர்வுகள் நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோட்டில் நேற்று காலை நடந்த தேர்வை 92 பேரும், மாலையில் நடந்த தேர்வை 49 பேரும் எழுதினார்கள். இந்த ஆய்வின்போது ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதீன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
–––––––
பாக்ஸ்
--------
போலீஸ்காரர் மீது நடவடிக்கை
ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள சார்நிலை கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ள தேர்வு உபகரணங்களை டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலசந்திரன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக 2 போலீசார் நியமிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் ஒரு போலீஸ்காரர் மட்டும் பணியில் இருந்தார். மற்றொரு போலீஸ்காரர் பணியில் இல்லை. அதுபற்றி டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன் விசாரித்தபோது, அந்த போலீஸ்காரர் சொந்த வேலைக்காக வெளியில் சென்றிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பணியில் இல்லாத போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்க அங்குள்ள ஒரு பதிவேட்டில் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் எழுதி வைத்தார்.
----------

----
Reporter : D. SHYAM SUNDAR  Location : Erode - ERODE

மேலும் செய்திகள்