வருவாய்த்துறையினர் காலவரையற்ற வேலைநிறுத்தம்

வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலகம் மட்டுமல்லாமல் தேர்தல் அலுவலகமும் மூடப்பட்டதால் அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்பட்டன.

Update: 2021-02-17 15:22 GMT
ராமநாதபுரம்,
வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலகம் மட்டுமல்லாமல் தேர்தல் அலுவலகமும் மூடப்பட்டதால் அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்பட்டன.

போராட்டம்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் மத்திய செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டன. இதன்படி அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரை மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.
 புதிதாக நியமனம் செய்யப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட தலைநகரங்களில் அடிப்படை பயிற்சி மற்றும் நிலஅளவை பயிற்சி வழங்க வேண்டும், கருணை அடிப்படையிலான பணி வரண்முனை அதிகாரத்தை மாவட்ட கலெக்டர்களுக்கு வழங்க வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 19-ந் தேதி முதல் பல்வேறு கட்ட போராட்டங்களை மேற்கொண்டு வந்தனர்.

வேலை நிறுத்தம்
 
இதன் நிறைவாக நேற்று முதல் மாநிலம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் அனைத்து ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர். இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், 9 தாலுகா அலுவலகங்கள், 2 வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், 22 இதர சிறப்பு பிரிவு அலுவலகங்கள் என மொத்தம் 34 அலுவலகங்களில் வருவாய்த்துறை அலுவலர்கள் பணிகளில் ஈடுபடாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். 
இதனால் தாலுகா அலுவலகம் மட்டுமல்லாது சட்டமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் தேர்தல் பிரிவு அலுவலகமும் இழுத்து மூடப்பட்டன. அத்தியாவசிய பணிகளுக்காக மேற்கண்ட அலுவலகங் களை நாடி வந்த பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் ஏமாற்றத்துடன் வேதனையுடன் திரும்பி சென்றனர்.
பேச்சுவார்த்தை

மாவட்டம் முழுவதும் அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரையிலான 216 பெண்கள் உள்பட 524 பேர் கலந்துகொண்ட இந்த வேலைநிறுத்த போராட்டத்தினால் மாவட்ட நிர்வாகத்தின் பணிகள் முழுமையாக ஸ்தம்பித்தன. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் பழனிக்குமார், மாவட்ட செயலாளர் தமீம்ராசா ஆகியோர் கூறியதாவது:- 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாதவரை மாநில முடிவின்படி இந்த காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடரும். சட்டமன்ற தேர்தல் உள்ளிட்ட அவசர அவசிய பணிகளை கருதி தமிழக அரசு பேச்சுவார்த்தை மூலம் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினர்.

மேலும் செய்திகள்