10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டம்

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரியில் வருவாய்த்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடின.

Update: 2021-02-17 16:43 GMT
ஊட்டியில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.
ஊட்டி

தமிழகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட தலைநகரங்களில் அடிப்படை பயிற்சி வழங்க வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தொடங்கியது. 

ஊட்டி தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரியும் வருவாய்த்துறை அலுவலர்கள்  பணிக்கு வரவில்லை. அவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகம் வெறிச்சோடி இருந்தது.

மேலும் நிர்வாகிகள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். துணை தலைவர் தமிழ்வாணன், பொருளாளர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். 

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் இருப்பிட சான்றிதழ் உள்பட சான்றிதழ்கள் வழங்கும் பணி, நில அளவீடு, தேர்தல் பணி உள்பட அனைத்து அலுவலக பணிகளும் பாதிக்கப்பட்டது. 

இதுகுறித்து நீலகிரி மாவட்ட தலைவர் சிவகுமார் கூறும்போது, நீலகிரியில் வருவாய்த்துறை அலுவலர்கள் 245 பேர் பணிபுரிந்து வருகின்றனர். கருணை அடிப்படையில் நியமனதாரர்களின் பணியை ஒரே அரசாணையில் வரன் முறை செய்து ஆணையிட மாவட்ட கலெக்டருக்கு அதிகாரம் அளிக்க வேண்டும். எங்களுடைய கோரிக்கைக்கு தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என்றார். 

மேலும் செய்திகள்