தென்காசியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் நிகழ்ச்சி அரங்கை அமைச்சர் உதயகுமார் பார்வையிட்டார்

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வியாழக்கிழமை) தென்காசியில் பிரசாரம் செய்கிறார். இதையொட்டி நிகழ்ச்சி நடைபெறும் அரங்கை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பார்வையிட்டார்.

Update: 2021-02-17 19:23 GMT
தென்காசி:
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வியாழக்கிழமை) தென்காசியில் பிரசாரம் செய்கிறார். இதையொட்டி நிகழ்ச்சி நடைபெறும் அரங்கை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பார்வையிட்டார்.

தேர்தல் பிரசாரம்

தமிழக சட்டமன்றத்திற்கான பதவிக்காலம் வருகிற மே மாதம் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே அதற்கு முன்னதாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகின்றது. அரசியல் கட்சியினர் தற்போது தேர்தல் ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழக  முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தில் இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இன்று (வியாழக்கிழமை) ராதாபுரம் தொகுதியில் இருந்து புறப்படும் முதல்-அமைச்சர் தென்காசி மாவட்டம் ஆலங்குளம், பாவூர்சத்திரம் ஆகிய ஊர்களில் திறந்த வேனில் நின்று பொதுமக்களிடையே பேசுகிறார்.

இதனையடுத்து தென்காசி நகர எல்லையில் உள்ள இசக்கி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெறும் அ.தி.மு.க. மகளிரணி மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகள் தீவிரம்

முதல்-அமைச்சரை வரவேற்க அ.தி.மு.க.வினர் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் வழி நெடுக அ.தி.மு.க. கொடிக்கம்பங்கள் நடப்படுகின்றன. மகளிர் மாநாடு நடைபெறும் திருமண மண்டபம் அலங்கரிக்கப்படுகிறது.
இந்த மண்டபத்தை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பார்வையிட்டார். அவருடன் அமைச்சர் ராஜலட்சுமி, தெற்கு மாவட்ட செயலாளர் செல்வ மோகன் தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா ஆகியோரும் பார்வையிட்டனர்.

இதில் அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுந்தரம், தென்காசி நகர செயலாளர் சுடலை, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இளைஞர் அணி செயலாளர் கணபதி, மாவட்ட பாசறை செயலாளர் சிவ சீதாராம், கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் அமல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்