லாரி மோதி மாநகராட்சி ஊழியர் பலி

திருப்பூரில் குப்பை லாரி மோதியதில் மாநகராட்சி ஊழியர் பரிதாபமாக இறந்தார்

Update: 2021-02-17 22:38 GMT
அனுப்பர்பாளையம்:
திருப்பூர் சூசையாபுரம் பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 50). மாநகராட்சி 2-வது மண்டலத்தில் கொசு மருந்து தெளிக்கும் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று காலை பூண்டி-பூலுவப்பட்டி ரிங்ரோட்டில் மாநகராட்சி சார்பில் குப்பை கொட்டப்பட்டு வரும் பாறைக்குழி அருகே கொசு மருந்து அடித்துக்கொண்டிருந்தார். அப்போது 1-வது மண்டலத்தில் இருந்து குப்பைகளை கொட்டுவதற்காக பாறைக்குழிக்கு மாநகராட்சி லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை ரவி என்பவர் ஓட்டி வந்தார். பின்னர் அவர் லாரியில் இருந்த குப்பையை கொட்ட லாரியை பின்னோக்கி ஓட்டினார். அப்போது லாரியின் பின்பகுதியில் மருந்து அடித்துக் கொட்டிருந்த முரளியின் மீது லாரி மோதியது. இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். ஆனால் இது தெரியாமல் லாரியை ரவி தொடர்ந்து பின்பக்கமாக ஓட்டியதால் முரளி மீது லாரி ஏறியதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 
இதுகுறித்து தகவலறிந்த 15 வேலம்பாளையம் போலீசார் மற்றும் மாநகராட்சி 1 மற்றும் 2-வது மண்டலத்தை சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் டிரைவரின் கவனக்குறைவால் முரளி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முரளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் குப்பை லாரி மோதி மாநகராட்சிஊழியர் உடல் நசுங்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்