சேலத்தில் அரசு டாக்டர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்

அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சேலத்தில் அரசு டாக்டர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-18 00:18 GMT
சேலம், 

தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் அரசு டாக்டர்களுக்கு மற்ற மாநிலத்தில் வழங்குவது போன்று சம்பளம் வழங்க வேண்டும். பதவி உயர்வு வழங்க வேண்டும். ஊதிய உயர்வு வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்கள் நியமிக்க வேண்டும். கலந்தாய்வு மூலம் பணி வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவித்த சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய அட்டைகள் அணிந்தபடி நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பணியில் ஈடுபட்டனர்.

வேலைநிறுத்த போராட்டம்

இதுகுறித்து சேலம் மாவட்ட அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பினர் கூறியதாவது:-

அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் எங்கள் கோரிக்கைகள் அடங்கிய அட்டை அணிந்தபடி தற்போது பணியில் ஈடுபட்டு உள்ளோம். கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்த அட்டையை அணிந்தபடி பணியில் ஈடுபடுவோம்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2018- ம் ஆண்டு ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினோம். பின்னர் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தி உள்ளோம். அதே கோரிக்கைகளை முன்வைத்து தற்போது மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளோம். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் பணியாற்றி வரும் டாக்டர்கள் கோரிக்கை அட்டை அணிந்தபடி பணியில் ஈடுபட்டு உள்ளனர், என்று கூறினர்.

மேலும் செய்திகள்