டிராக்டரில் ஏற்றி வந்த வைக்கோல் மின் கம்பியில் உரசி தீப்பற்றி எரிந்தது
டிராக்டரில் ஏற்றி வரப்பட்ட வைக்கோல் மின் கம்பியில் உரசி தீப்பற்றி எரிந்து நாசமானது.;
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அனைகுடம் கிராமத்தை சேர்ந்த தர்மராஜின் மகன் கணபதி(வயது 35). இவருக்கு சொந்தமான டிராக்டரில் இடங்கண்ணி கிராமத்தில் இருந்து அனைகுடம் கிராமத்திற்கு வைக்கோல் ஏற்றி செல்லப்பட்டது. இடங்கண்ணி அண்ணங்காரன்பேட்டை பிரிவு சாலையில் அந்த டிராக்டர் வந்தபோது, சாலையின் குறுக்கே தாழ்வாக சென்ற மின்கம்பியில் வைக்கோல் உரசியது. இதில் வைக்கோல் தீப்பற்றி எரிய தொடங்கியது. அதை கண்டவர்கள், டிராக்டர் டிரைவரிடம் வைக்கோல் தீப்பற்றி எரிவதாக கூறினர். இதையடுத்து உடனடியாக டிராக்டரில் இருந்து, வைக்கோல் ஏற்றப்பட்ட டிப்பரை கழற்றி விட்டனர். பின்னர் தீ மளமளவென பரவி கொளுந்துவிட்டு எரிந்தது. கிராம பகுதியை சேர்ந்த மக்கள், அருகில் உள்ள பெரிய ஏரியில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து ஊற்றி தீ பரவாமல் தடுத்தனர். மேலும் இது பற்றி தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் அங்கு வந்து, இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது டிப்பருக்கு சேதம் ஏற்படாமல் வைக்கோலை மட்டும் சாலையில் தள்ளி தீயை முற்றிலும் அணைத்தனர். இருப்பினும் வைக்கோல் எரிந்து நாசமானது. குடியிருப்பு பகுதியில் டிராக்டரில் ஏற்றி வரப்பட்ட வைக்கோல் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த இடத்தில் தாழ்வாக செல்லும் மின்கம்பியை, புதிய உயரமான மின் கம்பம் அமைத்து சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.