பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
தாமரைக்குளம்:
அரியலூரில் அண்ணா சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மணிவேல் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் சின்னதுரை கண்டனம் தெரிவித்து பேசினார். கியாஸ் விலை உயர்வை கண்டிக்கும் விதமாக கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது, பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்கிறது. எனவே அவற்றின் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைசாமி, இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.