மானாவாரி வளர்ச்சி திட்டம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

மானாவாரி வளர்ச்சி திட்டம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2021-02-26 19:14 GMT
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் வேளாண் விரிவாக்க மையத்தில் விக்கிரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு தா.பழூர் வட்டார வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில் மானாவாரி வளர்ச்சி திட்டம் குறித்த பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் கோடை உழவு செய்வதன் அவசியம் குறித்தும், இந்தப் பகுதிக்கு ஏற்ற கடலை விதை ரகங்கள் குறித்தும், அதன் மகசூல் பண்புகள் குறித்தும் எடுத்து கூறப்பட்டது. மேலும் விதை நேர்த்தி செய்வதால் விதை மூலம் பரவும் பூஞ்சான நோயை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் விரிவாக எடுத்து கூறப்பட்டது. ஊடுபயிர் சாகுபடி செய்வதன் மூலம் நன்மை செய்யும் பூச்சிகளை வரவழைத்து தீமை செய்யும் பூச்சிகளை இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம் என்றும் விளக்கி கூறப்பட்டது. மேலும் அட்மா திட்டம் குறித்தும் விரிவாக பேசப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் அசோகன் தலைமை தாங்கினார். கிரீடு வேளாண்மை அறிவியல் மைய ஆராய்ச்சியாளர் அசோக்குமார் மற்றும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ரஞ்சிதா மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் லட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்