காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே விபத்து: மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; பா.ம.க. பிரமுகர் உள்பட 2 பேர் பலி
வாலாஜாபாத் அருகே கனரக லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் பா.ம.க. பிரமுகர் உள்பட 2 பேர் பலியானார்கள்.;
லாரி மோதி விபத்து
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா மதுரா நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் எத்திராஜ் (வயது 68). விவசாயியான இவர், முன்னாள் பாட்டாளி மக்கள் கட்சி ஒன்றிய செயலாளராகவும் இருந்துள்ளார். இவருடைய சம்பந்தி வேலூரை சேர்ந்த விவசாயியான சிவசங்கரன் (78) ஆவார். இந்நிலையில் சிவசங்கரன் எத்திராஜ் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் அவரை எத்திராஜ் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு ஒரகடம் வாலாஜாபாத் சாலையில் உள்ள தனது நிலத்தில் உள்ள விவசாய பயிரை காட்டுவதற்காக அழைத்துச் சென்றுள்ளார்.
இதற்கிடையே, மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் சாலையை கடக்கும்போது எதிர்பாராதவிதமாக வாலாஜாபாத் பகுதியிலிருந்து வேகமாக வந்த கனரக லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
2 பேர் பலி
இந்த விபத்தில் சிக்கி மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த எத்திராஜ் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து உயிரிழந்தார்.அதைத்தொடர்ந்து விபத்தை கண்டதும் சாலையில் இருந்தவர்கள் ஓடிவந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிவசங்கரனை மீட்டு, சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிவசங்கரன் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த வாலாஜாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து கவனக்குறைவாக கனரக லாரியை வேகமாக ஓட்டி வந்த டிரைவரான சென்னை, பொழிச்சலூரைச் சேர்ந்த சதீஷ் பாபு, (40) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.