அரியலூர் மாவட்டத்தில் தலைவர்கள் சிலைகள் மூடல்
அரியலூர் மாவட்டத்தில் தலைவர்கள் சிலைகள் மூடல்;
அரியலூர்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பினை கடந்த 26-ந் தேதி மாலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவித்தவுடன் தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதையொட்டி எம்.எல்.ஏ. அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டன. அரசு அலுவலகங்களில் தொங்கவிடப்பட்டிருந்த முதல்-அமைச்சர், தலைவர்களின் உருவப்படங்களும் அகற்றப்பட்டன.
மேலும் அரியலூர் மாவட்டத்தில் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகளில், அரசியல் கட்சியினர் சிலர் தாமாகவே முன்வந்து அப்புறப்படுத்தினர். அரியலூர் மாவட்டத்தில் தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் மூடப்பட்டன. அதன்படி அரியலூர் பஸ்நிலைய நுழைவுவாயில் அருகில் இருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகள் மற்றும் வளைவுகளில் இருந்த தமிழக முன்னாள் முதல்- அமைச்சர்களின் பெயர்கள் நேற்று துணிகளால் மூடப்பட்டன. மேலும் கட்சி கொடி கம்பத்துடன் அகற்றப்பட்டது. அம்மா உணவகங்களில் இருந்த ஜெயலலிதாவின் உருவப்படம் மறைக்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினரால் எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களின் மீது சுண்ணாம்பு அடித்து அழிக்கப்பட்டு வருகிறது. சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் அகற்றப்பட்டு தூய்மை செய்யப்பட்டு வருகிறது.