தேர்தல் பாதுகாப்பு, பணப்பட்டுவாடாவை தடுப்பது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ஆலோசனை

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பாதுகாப்பு, பணப்பட்டுவாடாவை தடுப்பது உள்ளிட்ட பணியை மேற்கொள்வதற்காக துணை ராணுப்படையினர் வர தொடங்கி உள்ளனர்.

Update: 2021-03-01 03:52 GMT
சென்னை, 

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பாதுகாப்பு, பணப்பட்டுவாடாவை தடுப்பது உள்ளிட்ட பணியை மேற்கொள்வதற்காக துணை ராணுப்படையினர் வர தொடங்கி உள்ளனர்.

இந்தநிலையில் துணை ராணுவப்படையினருடன் இணைந்து பாதுகாப்பு பணியை மேற்கொள்ளுதல், வாகன சோதனை மற்றும் ரோந்து பணியை தீவிரப்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ‘தேர்தல் அமைதியாகவும், பாதுகாப்பாகவும், நேர்மையாகவும் நடைபெற வேண்டும். மக்கள் எந்தவித அச்சமோ, தயக்கமோ இன்றி வாக்களிக்க வரவேண்டும். எனவே அதற்கான களப்பணிகளை நாம் தீவிரமாக ஆற்ற வேண்டும். ரவுடிகள், சமூக விரோதிகள் மூலம் தேர்தல் பாதுகாப்பு குந்தகம் ஏற்பட்டு விடக்கூடாது. எனவே தலைமறைவாக உள்ள ரடிவுகள், பிடி ஆணை உள்ள குற்றவாளிகளை தேடுதல் வேட்டை நடத்தி கைது செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள், ஆலோசனைகளை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வழங்கியதாக தெரிகிறது.

இந்த கூட்டத்தில் கூடுதல் போலீஸ் கமிஷனர்கள், இணை மற்றும் துணை கமிஷனர்கள் உள்பட உயர் போலீஸ் அதிகாரிகளும், மாநகராட்சி தேர்தல் பிரிவு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்