‘காஞ்சீபுரம் மாவட்டத்தில் 178 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை’ மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தகவல்
4 தொகுதிகளில் 1,872 வாக்குச்சாவடிகள் உள்ளன: காஞ்சீபுரம் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக 178 வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.;
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் பணிகள் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள கூட்டரங்கில் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு பின்னர், நிருபர்களிடம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறியதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் (தனி), உத்திரமேரூர், காஞ்சீபுரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. காஞ்சீபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் 3 லட்சத்து 89 ஆயிரத்து 857 வாக்காளர்களும், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 433 வாக்காளர்களும், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 633 வாக்காளர்களும், காஞ்சீபுரம் சட்டமன்ற தொகுதியில் 3 லட்சத்து 8 ஆயிரத்து 406 வாக்காளர்களும் என மொத்தம் 13 லட்சத்து 15 ஆயிரத்து 329 வாக்காளர்கள் உள்ளனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு ஸ்ரீபெரும்புதூர் தனித்துணை ஆட்சியர் எஸ்.சாந்தி, ஸ்ரீபெரும்புதூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்ட அலுவலர் டி.முத்து மாதவன், உத்திரமேரூர் தொகுதிக்கு காஞ்சீபுரம் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜி.சரஸ்வதி, காஞ்சீபுரம் தொகுதிக்கு, காஞ்சீபுரம் வருவாய் கோட்ட அலுவலர் பெ.ராஜலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 542 வாக்குச்சாவடி மையங்களும், 1,872 வாக்குச்சாவடிகளும் உள்ளது. மேலும் மாவட்டத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களாக சுமார் 8 ஆயிரத்து 983 நபர்களும், இதர தேர்தல் பணிகளில் சுமார் 2 ஆயிரத்து 100 நபர்களும் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் தொடர்பாக புகார்களை தொலைபேசி எண் - 044 27236205, 27236206, 27236207, 27236208 மற்றும் இலவச அழைப்பு எண் - 1800 425 7087 ஆகியவற்றில் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
மேலும் தேர்தல் நன்னடத்தை நெறிமுறைகளையும், நடைமுறைகளையும் கண்காணிக்க 8 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவாகும் வாக்குகளை எண்ணும் மையம் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் செயல்படும். மாவட்டத்தில், பதற்றமான வாக்கு சாவடிகளாக 178 வாக்கு சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது என தெரிவித்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.