தேர்தல் கட்டுப்பாட்டு மையம் செயல்பட தொடங்கியது
கோவை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு மையம் நேற்று முதல் செயல்பட தொடங்கியது. 30 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கா விட்டால் தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகார் சென்று விடும்.;
கோவை,
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடக்கிறது. இதற்கான ஆயத்த பணிகளை கோவை மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக கோவை கலெக்டர் அலுவலகத்தின் முதல் தளத்தில் தற்போது தேர்தல் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
இது, கோவை விமான நிலைய நில எடுப்பு பிரிவு மாவட்ட வருவாய் அதிகாரி அசோகன் தலைமையில் வளர்ச்சிப்பிரிவின் 2 உதவி இயக்குனர்கள் மேற்பார்வையில் நேற்று முதல் செயல்பட தொடங்கியது.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு மையத்தை பொதுமக்கள் 1800 425 4757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.
வாக்காளர்க ளுக்கு பணம் கொடுத்தல், தேர்தல் விதிமுறைகளை மீறி நோட்டீசு ஒட்டுதல், வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வினியோகித்தல் உள்ளிட்ட தேர்தல் விதிமீறல் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.
30 நிமிடங்களில் நடவடிக்கை
அந்த விவரங்கள், தேர்தல் பறக்கும் படைக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக் கை எடுக்க உத்தரவிடுவார்கள். 30 நிமிடங்களுக்குள் பறக்கும்படை அந்த இடத்துக்கு செல்லாவிட்டால் அந்த புகார் தானாகவே சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலர் அடுத்து சென்னையில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரிக்கு சென்று விடும்.
எனவே பொதுமக்கள் புகார் தெரிவித்த 30 நிமிடங்களில் அதன் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படும். எனவே பொதுமக்கள் எப்போதும் புகார் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.