மின்சாரம் பாய்ந்து தி.மு.க. தொண்டர் பலி; கட்சி கொடிக்கம்பத்தை அகற்றிய போது பரிதாபம்

மணப்பாறை அருகே கட்சி கொடிக்கம்பத்தை அகற்றிய போது மின்சாரம் பாய்ந்து தி.மு.க. தொண்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update:2021-03-03 02:17 IST
மணப்பாறை, 
மணப்பாறை அருகே கட்சி கொடிக்கம்பத்தை அகற்றிய போது மின்சாரம் பாய்ந்து தி.மு.க. தொண்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சட்டமன்ற தேர்தல்

தமிழகத்தில் 2021-ம் ஆண்டிற்கான சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 26-ந்தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதன்காரணமாக பொது இடங்களில் உள்ள கட்சிக்கொடி கம்பங்களை அப்புறப்படுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் அரசியல் கட்சியினர் தங்கள் கொடிக்கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் புத்தாநத்தம் கடைவீதியில் இருந்த கட்சி கொடிக்கம்பங்களை அகற்றும் பணியில் தி.மு.க.வினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் ஈடுபட்டிருந்தனர்.

மின்சாரம் பாய்ந்து தி.மு.க. தொண்டர் பலி

அப்போது புத்தாநத்தம் கிழக்கு தெருவை சேர்ந்த தி.மு.க. தொண்டரும், கூலித்தொழிலாளியுமான ரஷீத் அலி (வயது 32) கட்சி கொடிக்கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கொடிக்கம்பத்தை அகற்றும் போது, எதிர்பாராத விதமாக மேலே சென்று கொண்டிருந்த மின்கம்பியில் கொடிக்கம்பம் சாய்ந்தது.

இதனால் கொடிக்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்ததுடன், அதை பிடித்துக்கொண்டிருந்த ரஷீத் அலி மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் தூக்கிவீசப்பட்டு கீழே விழுந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.

போலீசார் விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்த புத்தாநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், ரஷீத் அலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து புத்தாநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்