கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்; துப்புரவு பணியாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக துப்புரவு பணியாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.;

Update:2021-03-05 00:29 IST
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் நிரந்தர துப்புரவு பணியாளர்கள், தினக்கூலி ஒப்பந்த தொழிலாளர்கள், டெங்கு தொழிலாளர்கள் உள்பட 175-க்கும் மேற்பட்டோர் சுகாதார பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயங்கொண்டத்தில் துப்புரவு பணியாளர்கள் பேரவை கூட்டம், அண்ணா சிலை அருகே நடைபெற்றது. கூட்டத்தில், தினக்கூலி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் மாவட்ட கலெக்டர் உத்தரவிடும் கூலி உயர்வை அமல்படுத்தி சம்பளம் வழங்கப்படாமல், குறைந்த கூலியே சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து கடந்த மாதம் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தும் தீர்வு ஏற்படவில்லை. எனவே உடனடியாக நிலுவைத்தொகையுடன் சம்பளத்தை வழங்க வேண்டும். நிரந்தர துப்புரவு தொழிலாளிக்கு தொடர்ந்து வருங்கால வைப்பு நிதி, சேமநல நிதி, இருப்பு கணக்கு கொடுக்கப்படாமல் உள்ளது. மேலும் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கும் பிடித்த தொகை கணக்கில் இல்லை. எனவே உடனடியாக ஆண்டு வாரியாக கணக்கு கொடுக்கப்பட வேண்டும். நிரந்தர தொழிலாளர்களின் பணிப்பதிவேட்டை தொழிலாளர்களை பார்க்க அனுமதித்து குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் சம்பளம் வங்கி கணக்கு மூலம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் மேற்கண்ட கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றாத பட்சத்தில் தேர்தலுக்குப்பின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபடப்போவதாகவும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. செயலாளர் தம்பிசிவம் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்