போலி மதுபான தொழிற்சாலையில் ரூ.14 லட்சம் கள்ளநோட்டுகள் சிக்கியது; பெண் உள்பட 2 பேர் கைது
காஞ்சீபுரம் அருகே போலி மதுபான தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ரூ.14 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக பெண் உள்பட 2 பேரை கைது செய்தனர்.;
போலி மதுபான தொழிற்சாலை
காஞ்சீபுரம் அடுத்த திம்மசமுத்திரம் பகுதியில் போலி மதுபானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்குவதாக வந்த தகவலின்பேரில் மத்திய புலனாய்வு பிரிவினரும், காஞ்சீபுரம் மாவட்ட மதுவிலக்கு பிரிவினரும் இணைந்து திம்மசமுத்திரம் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அதில் அங்கு ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலி மதுபான தொழிற்சாலை செயல்படுவதை கண்டுபிடித்தனர். அங்கு தீவிரமாக சோதனை மேற்கொண்டனர்.
ரூ.14 லட்சம் கள்ளநோட்டுகள்அங்கு 105 லிட்டர் எரிசாராயம் மற்றும் போலி மதுபானம் தயாரிக்க பயன்படும் பாட்டில்கள், மூடிகள், ஸ்டிக்கர்கள் உள்பட மூலப்பொருட்கள் மற்றும் போலி முத்திரைகள் இருப்பதை கண்டுபிடித்தனர். மேலும் நடத்திய சோதனையில் அங்கு கள்ள ரூபாய் நோட்டுகள் தயாரிக்கப்படுவதும் தெரியவந்தது.
அங்கிருந்த ஜெராக்ஸ் எந்திரத்தில் இருந்து, ரூ.100, ரூ.500, ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டுகள் நகல் எடுக்கப்பட்டு வெட்டி முடிக்கப்படாத நிலையில் இருப்பது தெரிந்தது.
இதையடுத்து போலி மதுபான தொழிற்சாலையில் இருந்து ரூ.14 லட்சத்து 11 ஆயிரத்து 200 மதிப்பிலான கள்ளநோட்டுகள், 105 லிட்டர் எரிசாராயம், மூலப்பொருட்கள், இருசக்கர வாகனங்கள் உள்பட ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.
2 பேர் கைதுஇதுதொடர்பாக அந்த வீட்டில் தங்கி இருந்த அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த துளசி(வயது 41), சித்தேரிமேடு பகுதியைச் சேர்ந்த கலையரசன்(40) ஆகிய இருவரையும் காஞ்சீபுரம் மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் காஞ்சீபுரம் மதுவிலக்கு போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலி மதுபானங்கள் தயாரிப்பில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நேரத்தில் காஞ்சீபுரம் அருகே போலி மதுபான தொழிற்சாலையுடன், கள்ளநோட்டுகள் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.