வனப்பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக தண்ணீர் தொட்டிகளை தேடி வரும் காட்டு யானைகள்

வனப்பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக தண்ணீர் தொட்டி களை தேடி வரும் காட்டு யானைகள் தாகம் தீர தண்ணீர் குடித்து விட்டு வனப்பகுதிக்கு செல்கின்றன.

Update: 2021-03-07 18:26 GMT
மேட்டுப்பாளையம்,

கோவை வனக்கோட்டத்தில் கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இதில் மேட்டுப்பாளையம் வனச்சரகம் 9,200 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. 

இந்த வனச்சகரத்தில் புலி, காட்டு யானை, சிறுத்தை, கழுதைப்புலி, செந்நாய், காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதி வழியாகதான் பவானி ஆறும் செல்கிறது. காட்டு யானைகள் அதிகமாக இருப்பதால், அவை உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி குடியிருப்புகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. 

இதைத்தடுக்க மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் 19 தண்ணீர் தொட்டி கள், 4 கசிவுநீர் குட்டைகள் மற்றும் ஏராளமான தடுப்பணைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு தண்ணீர் நிரப்பப்பட்டு வருவதால், வனவிலங்குகள் இந்த நீர்நிலைகளில் தாகம் தீர்த்து வருகின்றன. 

இந்த நிலையில் வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு உள்ளதால் நீர்நிலைகள் வறண்டுவிட்டன. எனவே காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க தண்ணீர் தொட்டிகள் உள்ளிட்ட நீர்நிலை களில் வனச்சரக அதிகாரி பழனிராஜா மேற்பார்வையில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. 

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

வனப்பகுதியில் வெப்பம் அதிகமாக உள்ளதால், நீர்நிலைகள் வறண்டு விட்டன. மரங்கள், செடிகளில் இலைகளும் உதிர்ந்துவிட்டதால், வெப்பம் தாங்க முடியாமல் வனவிலங்குகள் தண்ணீர் தேடி வெளியே வந்து விடுகிறது. 

இதைத்தடுக்க தினமும் தண்ணீர் தொட்டி உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. இதனால் கூட்டங்கூட்டமாக வரும் காட்டு யானைகள் நீர்நிலைகளில் தாகம் தீர்ப்பதுடன், குளித்து மகிழ்கின்றன. குறிப்பாக குட்டியானைகள் நீர்நிலைகளில் குளித்து மகிழ்வதை பார்க்கவே அழகாக இருக்கிறது.

எனவே குடிநீர் தொட்டிகளை கண்காணித்து தண்ணீர் நிரப்ப தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தினமும் வனப்பகுதிக்குள் ரோந்து சென்று கண்காணித்து வருகிறார்கள். தற்போது வறட்சி நிலவுவதால், வனப்பகுதிக்குள் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் இருக்கிறது. 

எனவே பொதுமக்கள் அத்துமீறி வனப்பகுதிக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

மேலும் செய்திகள்