பரமத்திவேலூர் அருகே திருமணமான 4 மாதத்தில் லாரி டிரைவர் தீக்குளித்து தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது

பரமத்திவேலூர் அருகே திருமணமான 4 மாதத்தில் லாரி டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.

Update: 2021-03-07 18:56 GMT
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் அருகே திருமணமான 4 மாதத்தில் லாரி டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
லாரி டிரைவர்
பரமத்திவேலூர் அருகே உள்ள சூரியாம்பாளையம் துண்டுகாடு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் தனசீலன் (வயது 31). லாரி டிரைவர். இவருக்கும் திருச்செங்கோட்டை சேர்ந்த மைதிலி (22) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. மைதிலி தற்போது 2 மாத‌ கர்ப்பிணியாக உள்ளார். இதனால் தனசீலன் மனைவி மைதிலியை‌ அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. 
இந்தநிலையில் நேற்று தனசீலன் வீட்டின் மேற்கூரையின் சிமெண்டு அட்டை ஓடுகள் வெடித்து சிதறி வீட்டிற்குள் இருந்து புகை வந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்களும், அருகே தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தனசீலனின் பெற்றோரும் ஒடி‌ சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் மேற்கூரையை உடைத்து உள்ளே பார்த்தனர். அங்கு படுக்கையறையில் தனசீலன் உடலில் தீப்பற்றி எரிந்து கருகிய‌ நிலையில் இறந்து கிடந்தார். 
உருக்கமான கடிதம்
உடனடியாக அங்கிருந்தவர்கள் பரமத்தி போலீசாருக்கும், கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது தனசீலன் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் அவர், கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது. 
அதில் தனசீலன், எனது மரண வாக்கு மூலம்‌ என தலைப்பிட்டு, ‘என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனக்கு தீராத வேதனை தரக்கூடிய நோய் ஏற்பட்டதால் இந்த நோய் யாருக்கும் பாதிக்க கூடாது, நீண்டகாலம் நான் உயிரோடு இருக்க முடியாது, இதனால் என் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் பாதிக்க கூடாது’ என எழுதி வைத்திருந்தார். மேலும் தனக்கு சேர வேண்டிய பணத்தை மனைவி மைதிலிக்கு கொடுக்குமாறும் எழுதி வைத்திருந்தாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. 
சோகம்
இதையடுத்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட தனசீலனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீராத நோயால் திருமணமான 4 மாதத்தில் லாரி டிரைவர் தனசீலன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்