100 சதவீத வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
ஜெயங்கொண்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.;
ஜெயங்கொண்டம்,
சட்டமன்ற தேர்தலின்போது ஜெயங்கொண்டம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் நகராட்சி சார்பில் ஆணையர் (பொறுப்பு) சிவராமகிருஷ்ணன் தலைமையில் அலுவலக பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது தேர்தலின்போது வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும், வாக்களிப்பது அனைவரின் ஜனநாயக கடமை, 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும், ஓட்டுக்கு பணம் பெறாமல் வாக்களிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி, கோஷம் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர். ஊர்வலமானது ஜெயங்கொண்டம் நகராட்சியில் தொடங்கி விருத்தாசலம் ரோடு, கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக அண்ணா சிலைக்கு சென்று முடிவடைந்தது. ஊர்வலத்தில் நகராட்சி பொதுப்பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன் மற்றும் நகராட்சி அலுவலக ஊழியர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.