மின்வேலியில் சிக்கி இறந்த மானை, குட்டியுடன் தீ வைத்து எரித்த 2 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம்

பெரம்பலூர் அருகே மின்வேலியில் சிக்கி இறந்த மான், குட்டியுடன் தீ வைத்து எரித்தது தொடர்பாக 2 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-03-07 19:52 GMT
பெரம்பலூர்:

தீ வைத்து எரிப்பு
பெரம்பலூர் அருகே அரணாரை கிராமத்தில் உள்ள அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர் பெரியசாமி(வயது 60). இவருக்கு சொந்தமான காலிமனை, மருதையான் கோவில் அருகே உள்ளது. அந்த காலிமனையில் கிடந்த சோளத்தட்டைகளில் நேற்று முன்தினம் மாலை ஒரு பெண் மான் மற்றும் அதன் குட்டியும் தீயில் கருகிய நிலையில் இறந்து கிடந்தன. இதில் பெண் மான் முற்றிலும் எரிந்த நிலையிலும், அதன் குட்டி பாதி எரிந்த நிலையிலும் கிடந்தன. மேலும் தொப்புள் கொடி அறுபடாத நிலையில் குட்டி மான் கிடந்தது.
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் அங்கு விரைந்து வந்து தீயில் எரிந்து கிடந்த மான்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் இறந்த பெண் மானுக்கு 3 வயது இருக்கும் என்றும், அதன் குட்டி ஆணா?, பெண்ணா? என்பதனை சம்பவ இடத்தில் கண்டறிய முடியவில்லை என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து மானின் உடல்களை மீட்ட வனத்துறையினர் பிரேத பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அபராதம்
மேலும் அந்த பகுதியை வனத்துறையினர் பார்வையிட்டனர். அப்போது அந்த காலிமனை அருகே வயலையொட்டி அமைக்கப்பட்டுள்ள மின்வேலி அறுந்து கிடந்ததும், தண்ணீரின்றி உள்ள வாய்க்காலில் மானின் ரத்தக்கரை படிந்திருந்ததும் தெரியவந்தது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். இதில், சினையாக இருந்த மான் அந்த வழியாக வந்தபோது மின்வேலியில் சிக்கி, மின்சாரம் பாய்ந்து இறந்ததும், இதற்கிடையே குட்டியை இறந்த நிலையில் ஈன்றிருந்ததும், தெரியவந்தது.
மேலும் அதே பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம்(60), பன்னீர்செல்வம்(58) ஆகியோர், மின்வேலியில் சிக்கி மான் இறந்ததை மறைப்பதற்காக இறந்த மானையும், குட்டியையும் அருகே உள்ள காலிமனையில் சோளத்தட்டையில் போட்டு தீ வைத்து எரித்துள்ளனர், என்பது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் அவர்கள் 2 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

மேலும் செய்திகள்