கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத 6 கடைகளுக்கு ரூ.5,500 அபராதம்
ஜெயங்கொண்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத 6 கடைகளுக்கு ரூ.5,500 அபராதம் விதிக்கப்பட்டது.;
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டத்திற்கு அருகில் உள்ள மாவட்டங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிப்பதன் காரணமாகவும், கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றுவதில் மக்கள் காட்டும் அலட்சிய போக்கு, திருமணம் போன்ற குடும்ப நிகழ்வுகள், திருவிழாக்களில் பங்கேற்பது, பயணங்கள் மேற்கொள்வது போன்றவற்றில் கட்டுப்பாடு இல்லாத நிலை தொடர்வதும், பொது இடங்களில் மக்கள் கூடுவது அதிகரித்து வருவதும் கொரோனா பரவும் அபாயத்தை அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், ஆய்வு செய்தும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நோய்த்தொற்று பரவலை தடுக்கும் விதமாக முக கவசம் அணியாத, சமூக இடைவெளி பின்பற்றாத, கிருமிநாசினி பயன்படுத்தாத மற்றும் வெப்பமானி உபயோகிக்காத கடைகள், வணிக நிறுவனங்ளில் ஆய்வு செய்யப்பட்து. இதில் 21 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டதில், 6 கடைகளில் முக கவசம் அணியாதது, சமூக இடைவெளியை கடைபிடிக்காதது போன்ற கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாதது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த கடைகளுக்கு மொத்தம் ரூ.5,500 அபராதமாக விதிக்கப்பட்டது. தொடர்ந்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் கடைகள் மூடி சீல் வைக்கப்படும் என்று கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆய்வின்போது நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சிவராமகிருஷ்ணன், வருவாய் உதவியாளர் சரஸ்வதி மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.