போலீஸ் அதிகாரிகள் மீது புகார் மனு

தேனி கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகள் மீது புகார் மனு;

Update:2021-03-08 18:20 IST
தேனி :

சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூரை சேர்ந்த ஒரு பிரிவினர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். 

அப்போது அவர்கள் கடந்த 5-ந்தேதி தங்கள் பிரிவை சேர்ந்த சிலருக்கும், மற்றொரு பிரிவை சேர்ந்த சிலருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையில் போலீசார் மற்றொரு பிரிவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அதுகுறித்து கலெக்டரிடம் மனு அளிக்க வந்துள்ளதாகவும் தெரிவித்தனர். 

இதையடுத்து அவர்களை மொத்தமாக கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் அனுமதிக்க முடியாது என்று போலீசார் தெரிவித்து, நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தினர். 

இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. 


அப்போது அவர்களுடன் வந்த பெண் ஒருவர் தான் மறைத்து எடுத்து வந்த மண்எண்ணெய் கேனுடன் கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றார்.

 அவரை போலீசார் தடுத்து நிறுத்தி அவரிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். 


இதையடுத்து அந்த பிரிவை சேர்ந்தவர்களின் பிரதிநிதிகள் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜாவிடம் மனு அளித்தனர். 

பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்று போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வியிடமும் புகார் மனு அளித்தனர். 

அதில், "எங்கள் குடியிருப்புக்குள் புகுந்து மற்றொரு பிரிவினர் தாக்கினர். இதுகுறித்து சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தோம். 

ஆனால், இந்த பிரச்சினையில் போலீசார் மற்றொரு பிரிவினருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். சின்னமனூரில் 2 போலீஸ் அதிகாரிகள், அவர்கள் சார்ந்த பிரிவினருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். 

எனவே, எங்கள் தரப்பு மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தனர்.


மேலும் செய்திகள்