அணியாதவர்களுக்கு உடனடி அபராதம்: ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்; கலெக்டர் சி.கதிரவன் உத்தரவு

ஈரோடு மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டார்.

Update: 2021-03-08 22:04 GMT
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டார்.
வாக்குப்பதிவு எந்திரங்கள்
ஈரோடு மாவட்டத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்காக வாக்குப்பதிவு எந்திரங்களை மாவட்ட அலுவலகத்தில் இருந்து தொகுதிகளுக்கு அனுப்பி வைப்பதற்கான ஒதுக்கீடு நிகழ்ச்சி ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான சி.கதிரவன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன், ஆர்.டி.ஓ. சைபுதீன் மற்றும் அனைத்து தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
முகக்கவசம் கட்டாயம்
பின்னர் பேசிய கலெக்டர் சி.கதிரவன் கூறியதாவது:-
கொரோனா காலக்கட்டத்தில் நடைபெறும் தேர்தல் என்பதால் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக பின்பற்றப்பட உள்ளன. குறிப்பாக தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. வீட்டை விட்டு வெளியே வந்து நடமாடுபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
இதுபோல் அரசியல் கட்சியினரும் இந்த விஷயத்தில் அக்கறை செலுத்தி, தங்கள் கட்சி கூட்டங்கள், உள்ளரங்கு கூட்டங்கள் எதுவாக இருந்தாலும் இடைவெளி பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். முகக்கவசம் அணிவதையும் உறுதி செய்ய வேண்டும்.
உடனடி அபராதம்
ஈரோடு மாவட்டத்தில் நாளை (அதாவது இன்று) முதல் முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளது. மீறி முகக்கவசம் இன்றி யாராவது வந்தால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும். அதிகாரிகள் இதில் அக்கறை செலுத்தி, உடனடியாக அபராதம் விதிக்க வேண்டும்.
இதுபோல் அரசியல் கட்சியினரும் தேர்தலின் முக்கியத்துவம் கருதி இந்த விஷயத்தை முழுமையாக பின்பற்ற வேண்டும். தேர்தல் நேரத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படும். இந்தநிலையில் வாக்கு சேகரிக்கவும், வாக்களிக்கவும் மக்கள் வந்து செல்ல முடியாத நிலை ஏற்படும்.
இவ்வாறு கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.

மேலும் செய்திகள்