விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

Update: 2021-03-09 05:16 GMT
குடியாத்தம்

விபத்தில் கால் துண்டிப்பு

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் வி.கோட்டாவை அடுத்த ஏடுசுற்றுலகோட்டா கிராமத்தை சேர்ந்தவர்  ரமேஷ் தச்சுத் தொழிலாளி. இவரது மகன் அர்ஜூன் (வயது 18), பிளஸ்-1 படித்து வருகிறார். கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது கிராமத்தின் அருகே சாலையில் உறவினருடன் நடந்து சென்றபோது, கே.ஜி.எப் பில் இருந்து வேலூர் சென்ற தமிழ்நாடு அரசு பஸ் அர்ஜூன் மீது மோதியது.

இதில் 2 கால்களிலும் காயம் ஏற்பட்டு இடது கால் துண்டிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து  அர்ஜூனின் தந்தை ரமேஷ் இழப்பீடு வழங்கக்கோரி குடியாத்தம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, அர்ஜூனனுக்கு இழப்பீடு தொகையாக ரூ.6 லட்சத்து 45 ஆயிரத்து 946 ரூபாய் வழங்க 2010-ஆம் ஆண்டு அரசு போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டார்.

அரசு பஸ் ஜப்தி

ஆனால் கோர்ட்டு உத்தரவுப்படி இழப்பீடு வழங்கவில்லை. அதைத்தொடர்ந்து ரமேஷ் மீண்டும் 2018-ம் ஆண்டு குடியாத்தம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் செந்தில்அழகன் மூலமாக மனுதாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த குடியாத்தம் சார்பு நீதிமன்ற நீதிபதி பி.சுந்தரராஜன் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் வட்டியுடன் சேர்த்து ரூ.7 லட்சத்து 53 ஆயிரம் வழங்க அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார். இருப்பினும் அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்கவில்லை.

இதனால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் நேற்று பாதிக்கப்பட்ட அர்ஜூன், அவரது தந்தை ரமேஷ் மற்றும் குடியாத்தம் சார்பு நீதிமன்ற அமீனா எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் குடியாத்தத்தில் இருந்து வேலூர் சென்ற அரசு பஸ்சை குடியாத்தம் போக்குவரத்து பணிமனை அருகே ஜப்தி செய்தனர். 
அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் இறக்கப்பட்டு மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். ஜப்தி செய்யப்பட்ட அரசு பஸ் குடியாத்தம் கோர்ட்டு  வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்