காஞ்சீபுரம் மாவட்டத்தில் பறக்கும் படைகள் பறிமுதல் செய்யும் பணத்தை விடுவிக்க சிறப்பு குழு கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பறக்கும் படைகள் பறிமுதல் செய்யும் பணத்தை விடுவிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் மகஸே்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.;

Update:2021-03-11 12:19 IST
காஞ்சீபுரம், 

மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தலையொட்டி பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் 24 மணி நேரமும் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகிறது. உரிய ஆவணங்கள் இல்லாமல் கார், பஸ், மோட்டார் சைக்கிள்களில் கொண்டு செல்லும் பணத்தை பறக்கும்படை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து வருகின்றனர். அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் பணத்திற்கு உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால் பறிமுதல் செய்யப்பட்ட தொகை திருப்பி தரப்படும்.

இவ்வாறு தொகையை திருப்பி தருவதற்காக காஞ்சீபுரம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின் பேரில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், மாவட்ட கருவூல அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலக செலவின கண்காணிப்பு ஒருங்கிணைப்பு அலுவலர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஒருங்கிணைப்பாளர்களை 9443395125 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

எனவே காஞ்சீபுரம் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் நிலை கண்காணிப்பு குழு, பறக்கும் படை அலுவலர்களால் எந்த ஆவணங்களும் இல்லாத காரணத்தால் பறிமுதல் செய்யப்பட்ட தொகையை விடுவிக்கவும், இது தொடர்பாக புகார்கள் ஏதேனும் இருப்பின் சம்பந்தப்பட்ட அலுவலர்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்