விளையாடியபோது புதிதாக வெட்டப்படும் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை பலி

விளையாடியபோது புதிதாக வெட்டப்படும் கிணற்றில் தவறி விழுந்த ஆண் குழந்ைத பரிதாபமாக இறந்தது.

Update: 2021-03-15 20:47 GMT
பெரம்பலூர்:

தொழிலாளிகள்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் தேவன். இவருக்கு திருமணமாகி மீனா என்ற மனைவியும், நவநிஷா (வயது 7), பவதாரணி (5) ஆகிய 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். மேலும் 1½ வயதில் தேவசீலன் என்ற ஆண் குழந்தையும் இருந்தது.
கிணறு வெட்டும் தொழில் செய்து வரும் தேவன்- மீனா தம்பதி, தங்களது குழந்தைகளுடன் பெரம்பலூர் தாலுகா வெள்ளனூரில் வேலாயுதம் என்பவருக்கு சொந்தமான இடத்தில் தங்கியிருந்து, சக தொழிலாளிகளுடன் கிணறு வெட்டும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குழந்தை சாவு
இந்த நிலையில் நேற்று மாலை வேலை முடிந்ததும் தேவனும், மீனாவும் சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது புதிதாக வெட்டப்படும் கிணற்றின் அருகே குழந்தை தேவசீலன் விளையாடி கொண்டிருந்தான். அப்போது தேவசீலன் 20 அடி ஆழத்திற்கு வெட்டப்பட்ட கிணற்றுக்குள் தவறி விழுந்து சுமார் 4 அடி கிடந்த தண்ணீரில் தத்தளித்தவாறு உயிருக்கு போராடினான். இதனை கண்ட அவனது பெற்றோர் உடனடியாக சக தொழிலாளிகளின் உதவியுடன் குழந்தை தேவசீலனை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
ஆனால் குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் தேவசீலன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையின் பிரேத கூடத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.
வாக்குவாதம்
அப்போது குழந்தையின் பெற்றோர், உறவினர்கள் பிரேத பரிசோதனை செய்யாமல் குழந்தையை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் மறுத்தனர். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த பெரம்பலூர் போலீசார் குழந்தையின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய பிரேத கூடத்தில் கொண்டு வைத்தனர்.

மேலும் செய்திகள்