உழவர் சந்தையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் உழவர்சந்தையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2021-03-17 00:12 IST
கோவை,

கோவை மாநகர பகுதியில் வடவள்ளி, ஆர்.எஸ்.புரம், சுந்தராபுரம், சிங்காநல்லூர் ஆகிய 4 இடங்களில் உழவர்சந்தை உள்ளது. இதில் ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தைக்கு தொண்டாமுத்தூர், மதுக்கரை, எஸ்.எஸ்.குளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தில் விளையும் காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். 

இதற்காக 300 விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. இங்கு மொத்தம் 192 கடைகள் உள்ளன. இது தவிர மகளிர் சுய உதவி குழுவினருக்கு 10 கடைகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. 

விவசாயிகள் ஆர்ப்பாட்டம் 

இந்த நிலையில் விவசாயிகள் சார்பில் அனுப்பப்படும் விற்பனையாளர் களை உழவர் சந்தை நிர்வாகம் அனுமதிக்க மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனை கண்டித்து விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்.எஸ். புரம் உழவர் சந்தை முன் திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் சு.பழனிசாமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தோட்ட வேலைகளில் கவனம் செலுத்தும் விவசாயிகள் தங்கள் சார்பாக காய்கறிகளை விற்பனை செய்ய ஒரு விற்பனையாளரை உழவர் சந்தைக்கு அனுப்புவது வழக்கம். 

விவசாயிகளுக்கு கால்நடைகள் பராமரிப்பு, காய்கறி செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது என பல்வேறு வேலைகள் உள்ளன.

அனுமதிக்க வேண்டும் 

எனவே அவர்கள் நேரடியாக உழவர் சந்தைக்கு காய்கறிகளை விற்பனை செய்ய வந்தால் விவசாய பணிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
 மேலும் அவர்களுக்கு இழப்பு ஏற்படும் நிலை உள்ளது. 

எனவே ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விவசாயிகள் சார்பில் அனுப்பப்படும் விற்பனையாளர்களை அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்