நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 21 பேர் வேட்புமனு தாக்கல்
நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 21 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.;
நெல்லை:
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை, நெல்லை, ராதாபுரம், நாங்குநேரி, அம்பை ஆகிய 5 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் அந்தந்த தாலுகா அலுவலங்களிலும், தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலங்களிலும் கடந்த 12-ந்தேதி தொடங்கியது.
நெல்லை சட்டசபை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஏ.எல்.எஸ்.லட்சுமணன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பாலகிருஷ்ணன் என்ற பால் கண்ணன், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ராகவன், மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன், சுயேச்சை வேட்பாளர்கள் இசக்கிமுத்து, கருப்பசாமி, தளபதி முருகன் ஆகியோர் நேற்று தேர்தல் நடத்தும் அலுவலரான நெல்லை உதவி கலெக்டர் சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
பாளையங்கோட்டை சட்டசபை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அப்துல்வகாப், எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர் நெல்லை முபாரக், மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் டாக்டர் பிரேம்நாத், சுயேச்சை வேட்பாளர் ரசூல் மைதீன் ஆகியோர் நேற்று நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான மாநகராட்சி ஆணையர் கண்ணனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
அம்பை தொகுதியில் தி.மு.க. மாற்று வேட்பாளர் பிரபாகரன் தேர்தல் நடத்தும் அதிகாரியான சேரன்மாதேவி உதவி கலெக்டர் பிரதீப்தயாளிடம் மனு தாக்கல் செய்தார். ராதாபுரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அப்பாவு, தி.மு.க. மாற்று வேட்பாளர் அலெக்ஸ், சுயேச்சை வேட்பாளர்கள் வீனஸ் வீரஅரசு, சந்திரன், இசக்கியப்ப மாணிக்கராஜா ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலர் உஷாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
நாங்குநேரி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் பரமசிவ அய்யப்பன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வீரபாண்டியன், நாம் தமிழர் கட்சி மாற்று வேட்பாளர் சோமசுந்தரம், சுயேச்சை வேட்பாளர் லெனின் ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலர் குழந்தைவேலுவிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளில் நேற்று ஒரே நாளில் 21 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.