தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள அனைத்து திட்டங்களையும் பரமக்குடி தொகுதியில் செயல்படுத்துவேன் தி.மு.க. வேட்பாளர் செ.முருகேசன் வாக்குறுதி

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள அனைத்து திட்டங்களையும் பரமக்குடி தொகுதியில் செயல்படுத்துவேன் என தி.மு.க. வேட்பாளர் செ.முருகேசன் கூறினார்.

Update: 2021-03-20 09:00 GMT
ராமநாதபுரம்,

பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் செ.முருகேசன் பல்வேறு கிராம மக்களையும், முக்கிய பிரமுகர்களையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதே போல் கிராமம் கிராமமாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அப்போது அவரை ஏராளமான பெண்கள் திரண்டு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். 

அப்போது அவர் வாக்காளர்கள் மத்தியில் பேசியதாவது: பரமக்குடி சட்டமன்ற தொகுதியானது எனது சொந்த தொகுதியாகும். இப்பகுதி மக்களிடையே அன்பும் பாசமும், கொண்டவன். உங்களைப் பற்றி நன்கு அறிந்தவன். அவர்களுக்கு என்ன திட்டங்கள் தேவை என்பது எனக்கு தெரியும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள அனைத்து திட்டங்களையும் பரமக்குடி தொகுதி மக்களுக்கு முழுமையாக கிடைக்க செய்வேன். 

இந்த தேர்தலில் வாக்காளர்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை அமோக வெற்றிபெறச் செய்ய வேண்டும். எனது முதல் வேலையே பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவது தான். இந்த தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பெரிய தொழிற்சாலைகளை உருவாக்குவேன். படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பேன். போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களை துவங்குவேன். 

தி.மு.க. ஆட்சி காலத்தில் இந்த மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாக கொண்டு வந்த காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தினை அனைத்து கிராமங்களுக்கும் சென்றடையும் வகையில் நடைமுறைப்படுத்துவேன். மக்கள் பணியாற்ற எனக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்