ஓசூரில் குடும்பம் நடத்த வர மறுத்த மனைவிக்கு அரிவாள் வெட்டு; தொழிலாளி கைது

ஓசூரில் குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை அரிவாளால் வெட்டிய கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-03-21 01:14 GMT
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள அக்கொண்டப்பள்ளியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 28). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சங்கீதா (23). இவர்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்தநிலையில் கடந்த 10-ந் தேதி சங்கீதா திடீரென மாயமானார். இது தொடர்பாக நாகராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி சங்கீதாவை கண்டுபிடித்தனர். தொடர்ந்து சங்கீதா ஓசூர் எழில் நகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் இருந்து வந்தார்.

சம்பவத்தன்று நாகராஜ் தனது மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதற்கு சங்கீதா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நாகராஜ், அரிவாளால் சங்கீதாவின் தலை மற்றும் கையில் வெட்டினார்.

இதில் பலத்த காயம் அடைந்த சங்கீதாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக சங்கீதாவின் தாயார் லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்தார்.

மேலும் செய்திகள்