கொடைக்கானல் அருகே மலைப்பாதையில் ஜீப் கவிழ்ந்து தம்பதி உள்பட 8 பேர் படுகாயம்
கொடைக்கானல் அருகே மலைப்பாதையில் ஜீப் கவிழ்ந்து தம்பதி உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.;
கொடைக்கானல்:
கொடைக்கானல் அருகே கும்பூர் என்ற மலைக்கிராமத்தில் இருந்து மன்னவனூர் நோக்கி ஜீப் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ஜீப்பை அதே ஊரை சேர்ந்த தங்கப்பாண்டி (வயது 42) என்பவர் ஓட்டினார். அதில், கும்பூரை சேர்ந்த செல்லப்பாண்டி (42), நாதன் (70), அவரது மனைவி பாப்பா (62), மோகன்ராஜ் (38) உள்பட 7 பேர் பயணம் செய்தனர்.
மன்னவனூர் அருகே மலைப்பாதையில் வண்ணாச்சி வளைவு என்ற இடத்தில் அந்த ஜீப் வந்தபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடியது. ஒருகட்டத்தில் அந்த ஜீப் மலைப்பாதையில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஜீப் டிரைவர் தங்கப்பாண்டி உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் அந்த ஜீப் சேதம் அடைந்தது. இதையடுத்து விபத்தில் காயமடைந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவர்களில் தங்கப்பாண்டி, செல்லப்பாண்டி, நாதன், பாப்பா ஆகிய 4 பேர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மோகன்ராஜ் உள்பட மற்ற 4 பேரும் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.