களக்காடு பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்- கால்தடங்களை வனத்துறையினர் ஆய்வு

களக்காடு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் மீண்டும் தொடங்கியது. இதையடுத்து சிறுத்தையின் கால் தடங்களை வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.

Update: 2021-03-21 21:13 GMT
களக்காடு, மார்ச்:
களக்காடு பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சிறுத்தையின் கால்தடங்களை வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.

மீண்டும் சிறுத்தை நடமாட்டம்

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சிறுத்தை நடமாட்டம் காணப்படுகிறது. இரவு நேரங்களில் சிறுத்தை ஊருக்குள் புகுந்து ஆடுகளை கடித்து கொல்கிறது. இதுவரை 5-க்கும் மேற்பட்ட ஆடுகளை சிறுத்தை கடித்து கொன்றுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் ேநற்று காலையில் சிதம்பரபுரம்-சேதுராயபுரம் கிராமத்திற்குள் மீண்டும் சிறுத்தை புகுந்தது. அங்குள்ள பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 49) என்பவரின் கிடைக்குள் புகுந்த சிறுத்தை அங்கு இருந்த ஆடுகளை கடிக்க முயற்சி செய்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ராமகிருஷ்ணன் சுதாரித்துக் கொண்டு சத்தம் போட்டார். இதைக்கேட்டு அக்கம், பக்கத்தினரும் ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் சிறுத்தையை விரட்டினர். இதனால் சிறுத்தை காட்டுப்பகுதிக்குள் தப்பிச் சென்று விட்டது. 

கூண்டு வைத்து பிடிக்க...

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து அப்பகுதியில் பதிந்திருந்த சிறுத்தையின் கால்தடங்களை ஆய்வு செய்தனர். 

சிறுத்தையை பிடிக்க கூண்டு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். குடியிருப்புகள் சூழ்ந்த பகுதியில் சிறுத்தை நடமாடி வருவதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். எனவே  சிறுத்தையை கூண்டு வைத்து உடனடியாக பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்