ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பிறந்த நாள்

ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பிறந்த நாள்: சிலைக்கு மாலை அணிவித்து கலெக்டர் மரியாதை

Update: 2021-03-30 18:20 GMT
ராமநாதபுரம்
​விடுதலைப் போராட்ட வீரர் மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி 30.3.1760-ல் பிறந்தவர். அன்றைய ராமநாதபுரம் சீமையின் மன்னராக ஆட்சிப் பொறுப்பேற்று எண்ணற்ற அறப்பணிகளையும், தமிழ் வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டவர். ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலின் மூன்றாம் பிரகாரத்தை கட்டி முடித்தவர். அன்றைய காலகட்டத்தில் ராமநாதபுரம் சீமையில் அதிக அளவிலான கைத்தறி நெசவுகளை நிறுவி, ஆங்கிலேயர்களிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் துணிகளை தவிர்த்திட இந்திய மக்களை ஊக்கப்படுத்தியவர். ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளையும், வணிகங்களையும் எதிர்த்து போராடியவர். இந்திய தேசத்தின் விடுதலைக்காக போராடி 23.1.1809-ல் சென்னை ஜார்ஜ் கோட்டையில் உயிர் நீத்தார். ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி செய்த தியாகங்களை கவுரவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு அவரது பிறந்த நாளான மார்ச் 30-ம் நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. அதன்படி அவரது 261-வது பிறந்த நாளையொட்டி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி  சிலைக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அரசு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கயிலைச்செல்வம் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்