அரிசி மூட்டைகளுடன் நின்ற லாரி கடத்தல்

பெரம்பலூரில் நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கி முன் அரிசி மூட்டைகளுடன் நிறுத்தப்பட்டிருந்த லாரியை மர்ம நபர்கள் கடத்தினர்.

Update: 2021-03-30 20:02 GMT
பெரம்பலூர்:

அரிசி மூட்டைகளுடன் வந்த லாரி
பெரம்பலூர் புறநகர் துறைமங்கலத்தில் நுகர்பொருள் வாணிப கழக அரிசி கிட்டங்கி உள்ளது. இந்த கிட்டங்கியில் பொது வினியோக திட்டத்திற்காக தினமும் அரிசி மூட்டைகள் வெளிமாவட்டங்களில் இருந்து லாரிகளில் கொண்டு வரப்பட்டு சேமிக்கப்படுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு திருச்சி காஜாமலையில் இருந்து, விமான நிலையப்பகுதி ஸ்டார் நகரை சேர்ந்த மனோகரன் என்பவருக்கு சொந்தமான லாரியில் 500 அரிசி மூட்டைகள், துறைமங்கலத்தில் உள்ள கிட்டங்கிக்கு கொண்டு வரப்பட்டது.
லாரி கடத்தல்
லாரியை ஓட்டி வந்த டிரைவர், திருச்சி விமான நிலையப்பகுதி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த பிரபாகரன்(வயது 33), நள்ளிரவில் கிட்டங்கி முன்பு லாரியை நிறுத்தினார். கிட்டங்கியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள், ஏற்கனவே வந்த லாரியில் இருந்த அரிசி மூட்டைகளை இறக்கிக்கொண்டிருந்தனர்.இதையடுத்து டிரைவர் பிரபாகரன், தான் ஓட்டி வந்த லாரியில் இருந்து அரிசி மூட்டைகளை இறக்க வசதியாக, சாவியை லாரியிலேயே ைவத்துவிட்டு, தொழிலாளர்களிடம் அது பற்றி தகவல் தெரிவித்துவிட்டு தூங்க சென்றுவிட்டார். இந்நிலையில் சாவி லாரியிலேயே இருந்ததை நோட்டமிட்ட மர்மநபர்கள், லாரியை அங்கிருந்து கடத்தி சென்றனர்.
ஏரிக்கரையில் நின்றது
இதையறிந்து அதிர்ச்சியடைந்த டிரைவர் பிரபாகரன், லாரியின் உரிமையாளரான மனோகரனுக்கு லாரி கடத்தி செல்லப்பட்ட விவரத்தை கூறினார். அவர் இது குறித்து பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
நேற்று அதிகாலை அந்த லாரி பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் உள்ள எசனை ஏரிக்கரையில் நின்றது. இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் அகிலன், உடனடியாக பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அரிசி மூட்டைகளுடன் நின்ற லாரியை கைப்பற்றி பெரம்பலூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தினர்.
11 மூட்டைகள் திருட்டு
இதில், லாரியில் இருந்த 11 அரிசி மூட்டைகள் மட்டும் திருட்டு போயிருந்தது, தெரியவந்தது. லாரியை கடத்திச்சென்றவர்கள் லாரியை மேற்கொண்டு ஓட்டிச்சென்றால் சிக்கிவிடுவோம் என்ற பயத்தில் எசனை ஏரிக்கரையில் நிறுத்திவிட்டு சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து அரிசி மூட்டைகளுடன், லாரியை கடத்திச்சென்றவர்களை தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்