அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்ததும் வேடசந்தூர் தொகுதி ஆதிதிராவிட மக்களுக்கு கான்கீரிட் வீடு - அ.தி.மு.க. வேட்பாளர் வி.பி.பி.பரமசிவம் எம்.எல்.ஏ. உறுதி
அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்ததும் வேடசந்தூர் தொகுதியில் வசிக்கும் ஆதிதிராவிட மக்கள் அனைவருக்கும் கான்கீரிட் வீடு கட்டித்தரப்படும் என்று அ.தி.மு.க. வேட்பாளர் வி.பி.பி.பரமசிவம் எம்.எல்.ஏ. உறுதி அளித்துள்ளார்.;
வேடசந்தூர்,
வேடசந்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக தற்போதைய எம்.எல்.ஏ. வி.பி.பி.பரமசிவம் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சென்று இரட்டைஇலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று அவர் வேடசந்தூர் பகுதியில் வீதி, வீதியாக சென்று பிரசாரம் செய்தார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் பேசியதாவது:
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், அவரது கட்சி வேட்பாளர்களும் பொய்யை மட்டுமே பேசி வருகின்றனர். எனவே இது உண்மைக்கும், பொய்க்கும் இடையே நடைபெறும் தேர்தல். கடந்த 10 ஆண்டுகளில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு பல்வேறு திட்டங்களை திறம்பட செய்துள்ளனர். ஆகவே மக்களுக்கான தலைவராக எடப்பாடி பழனிசாமி விளங்குகிறார்.
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்படும் என்று பொய்பிரசாரம் செய்து கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றனர். ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி, பொங்கல் பரிசுத்தொகை, அம்மா மினி கிளினிக், நகரும் ரேஷன்கடை, தாலிக்கு தங்கம் என வளர்ச்சி திட்டங்களை திறம்பட செய்துள்ளார். மேலும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தால் மகளிர் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500, குடும்பத்துக்கு 6 கியாஸ் சிலிண்டர்கள், வாஷிங்மெஷின் என மக்களுக்கான திட்டங்களை அறிவித்துள்ளார்.
வேடசந்தூர் தொகுதி மிகவும் வறட்சியான பகுதியாகும். மழைக்காலங்களில் இங்குள்ள குளங்களுக்கு தண்ணீர் வரத்து இல்லை. எனவே நமது தொகுதியில் பாசன பரப்பை அதிகரிக்க மாற்ற வேண்டும் என்பதற்காக கரூர் மாயனூர் அணையில் இருந்து குழாய் மூலம் காவிரிநீரை வேடசந்தூர் தொகுதிக்கு கொண்டு வர தனி திட்டம் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி வந்தேன். இதுகுறித்து கடந்த ஆண்டில் சட்டமன்றத்தில் குரல் கொடுத்தேன். அதையடுத்து 3-வது நாளே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தை ஆய்வு செய்ய ரூ 20 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.
தற்போது திட்டத்திற்கான ஆய்வு பணி நடைபெற்று வருகிறது. இத்திட்டத்திற்காக ரூ.182 கோடி ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் வேடசந்தூர், வடமதுரை, குஜிலியம்பாறை, எரியோடு, அய்யலூர், பாளையம் பகுதிகளில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் கிடைக்கும். இதனால் அங்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து பயிர்சாகுபடி அதிகரிக்கும். விவசாயிகளும் மகிழ்ச்சி அடைவர்.
அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். குறிப்பாக வேடசந்தூர் தொகுதியில் வசிக்கும் ஆதிதிராவிடர் மக்கள் அனைவருக்கும் கான்கீரிட் வீடு உறுதியாக கட்டித்தர நடவடிக்கை எடுப்பேன். அய்யலூர் பகுதியில் தக்காளி விளைச்சல் அதிகம் உள்ளது. எனவே அங்கு ரூ.24 கோடியில் உணவுப்பூங்கா அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தும், அதற்கான அரசாணையையும் முதல்&அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
கடந்த கால ஆட்சியில் அய்யலூர் அருகே பஞ்சந்தாங்கி மலைக்கிராமங்களுக்கு சாலைவசதி, வடமதுரை பேரூராட்சியில் கழிவுநீர் கால்வாய் என மக்களின் பல ஆண்டு கால கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளேன். அதேபோல் குஜிலியம்பாறையை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்று 30 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர். நான் எம்.எல்.ஏ. ஆனவுடன் முதல் வேலையாக இந்த கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளேன்.
அதுபோல குஜிலியம்பாறை பகுதியில் தீவிபத்து ஏற்பட்டால் வேடசந்தூரில் இருந்து தான் தீயணைப்பு வாகனம் வரவேண்டும் என்ற நிலை இருந்தது. இதனால் கால விரயம் ஏற்பட்டு சேதம் அதிகமாக காணப்பட்டது. இதை தவிர்க்க குஜிலியம்பாறை தாலுகாவுக்கு என்று தனியாக தீயணைப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுத்தேன். தற்போது அவற்றால் மக்கள் மிகவும் பயன்பெற்றுள்ளனர். மேலும் வேடசந்தூர் பகுதியில் உள்ள உறுப்புக்கல்லூரியை அரசு கல்லூரியாக தரம் உயர்த்தினேன். இதனால் கிராமப்புற மாணவர்கள் மிகுந்த பயனடைந்து வருகின்றனர். கல்லூரியில் குடிநீர், கட்டிடம் என அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றி கொடுத்துள்ளேன்.
சேணன்கோட்டை பகுதியில் முருங்கை அதிகளவில் சாகுபடி செய்யப்படுவதால் அங்கு முருங்கை பதப்படுத்தும் நிலையம், தண்ணீர்பந்தம்பட்டியில் உரம் தயாரிக்கும் கிடங்கு என விவசாயம் சார்ந்த பணிகள் அதிகம் நிறைவேற்றி உள்ளேன். வேடசந்தூர், குஜிலியம்பாறையில் இறந்தவர்களை தகனம் செய்வதற்காக திண்டுக்கல்லுக்கு வரவேண்டிய நிலையை தவிர்த்து, எரியோட்டில் ரூ.75 லட்சத்தில் மின்மயானம் மயானம் அமைக்க நடவடிக்கை எடுத்தேன். இதனால் வீண் அலைச்சல் தவிர்க்கப்பட்டுள்ளது.
வேடசந்தூர் தொகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி கூட்டுக்குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. விடுபட்ட ஊர்களுக்கும் காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்திலேயே வேடசந்தூர் தொகுதியில்தான் அதிக மினிகிளினிக் மற்றும் நடமாடும் ரேஷன் கடை திறக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு உள்ளது.
மழைக்காலங்களில் ஆர்.கோம்பை தொப்பையசாமி மலைப்பகுதியில் உள்ள ஓடைகள் வழியே வரும் தண்ணீர் குடகனாற்றில் வீணாக கலக்கிறது. இதை தடுத்து ஓடை தண்ணீர் வடுகம்பாடி, ஆர்.புதுக்கோட்டை, கூம்பூர் ஆகிய ஊராட்சிகளில் 9 குளங்களில் திருப்பி விடுவதற்காக ரூ.5 கோடியில் சீரமைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் கிராம பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து பாசனம், குடிநீர் பிரச்சினை ஏற்படாது.
மக்களை நம்பியே இந்த தேர்தலில் நான் களம் காண்கிறேன். உங்களில் ஒருவனாக ஏற்று இரட்டைஇலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றிபெற செய்தால் நமது தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்ற வளர்ச்சி திட்டங்களை கொண்டு வருவேன். இவ்வாறு அவர் கூறினார்.
பிரசாரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. தென்னம்பட்டி ச.பழனிச்சாமி, விவசாய அணி மாவட்ட செயலாளர் டி.சி.ராஜ்மோகன், ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியன் வேடசந்தூர் (மேற்கு), சவடமுத்து (கிழக்கு), வடமதுரை ஒன்றிய செயலாளர்கள் லட்சுமணன் (மேற்கு), தண்டாயுதம் (கிழக்கு), குஜிலியம்பாறை மலர்வண்ணன், நகர செயலாளர்கள் எம்.பாபுசேட் (வேடசந்தூர்), கே.வி.சி.மணி (அய்யலூர்), அறிவாளி (எரியோடு), பி.டி.ஆர்.பாலசுப்பிரமணி (வடமதுரை), பெருமாள் (பாளையம்) மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.