வாக்களிக்க மாட்டோம் என்று திருச்சியில் பார்வையற்றவர்கள் திடீர் போராட்டம் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையால் சமாதானம்

திருச்சியில் பார்வையற்றவர்கள் வாக்களிக்க மாட்டோம் எனக்கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அவர்கள் சமாதானம் அடைந்தனர்.

Update: 2021-04-06 21:17 GMT
செம்பட்டு,

திருச்சியில் பார்வையற்றவர்கள் வாக்களிக்க மாட்டோம் எனக்கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அவர்கள் சமாதானம் அடைந்தனர்.
பார்வையற்றவர்கள் திடீர் போராட்டம்

திருச்சி விமான நிலையம் அருகே லூப்ரா என்ற பெயரில் ஒரு தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பார்வையற்றவர்கள், முதியோர்கள், ஆதரவற்றவர்கள் சுமார் 180 பேர் தங்கியுள்ளனர். தாமஸ் என்பவர் இதனை நடத்தி வருகிறார். இந்த இல்லத்தை சமூக நலத்துறையில் பதிவு செய்வதற்கு மாநகராட்சி சுகாதார துறை சார்பில் சான்றிதழ் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் நாங்கள் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் எனக் கூறி தாமஸ் தலைமையில் 120 வாக்காளர்கள் நேற்று திடீரென வயர்லஸ் சாலைக்கு வந்தனர். அங்கு அவர்கள் சாலையோரம் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தாசில்தார் பேச்சுவார்த்தை

இதனைத் தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் அவர்களுடன் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதற்கு அவர்கள் மாநகராட்சி அதிகாரிகள் வந்து சான்றிதழ் தருவதாக உறுதி அளித்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் எனக்கூறினார்கள். இதனை தொடர்ந்து திருச்சி கிழக்கு தாசில்தார் குகன் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
வருகிற வெள்ளிக்கிழமை சுகாதாரத்துறை சார்பில் சான்றிதழ் வழங்குவதாக உறுதி அளித்தார். அதை ஏற்றுக்கொண்டு சமாதானம் அடைந்த பார்வையற்றவர்கள் அங்கிருந்து எழுந்து சென்றனர். பின்னர் அவர்கள் அருகில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு சென்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்