தனி வாக்கு சாவடி அமைத்தது ஓட்டு போட வசதியாக இருந்தது- பார்வையற்றவர்கள் பேட்டி

தனி வாக்கு சாவடி அமைத்து கொடுத்தது ஓட்டு போடுவதற்கு வசதியாக இருந்தது பார்வையற்றவர்கள் கூறினர்.

Update: 2021-04-06 21:17 GMT
 திருச்சி, 
  தனி வாக்கு சாவடி அமைத்து கொடுத்தது ஓட்டு போடுவதற்கு வசதியாக இருந்தது பார்வையற்றவர்கள் பேட்டியளித்தனர்.

தனி வாக்கு சாவடி  

  திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் நாகமங்கலம் கிராமத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட பார்வையற்ற குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வாக்களிப்பதற்காக நாகமங்கலத்தில் காந்திநகர் என்ற இடத்தில் தனி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது.
  இந்த வாக்குச்சாவடியில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 115. ஆண் வாக்காளர்கள் 65, பெண் வாக்காளர்கள் 50. இவர்கள் அனைவருமே பார்வையற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

பிரெய்லி முறை  

  இந்த வாக்கு சாவடியில் பார்வையற்றவர்கள் யாருடைய உதவியும் இன்றி பிரெய்லி முறையில் அவர்களாகவே வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னங்களை தெரிந்துகொண்டு வாக்கு அளிப்பதற்கு வசதியாக படிவங்களும் வைக்கப்பட்டிருந்தன. இதனால் பார்வையற்றவர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து சென்றனர்.

இதுபற்றி வாக்களித்து விட்டு வெளியே வந்த பார்வையற்ற முத்துக்குமார் (வயது 55) தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:-

வசதியாக இருந்தது  

  நான் ஊதுபத்தி வியாபாரம் செய்து வருகிறேன். எனக்கு பிறவியிலிருந்தே பார்வை கிடையாது. எல்லா தேர்தல்களிலும் நான் வாக்களித்து எனது ஜனநாயக கடமையை ஆற்றி வருகிறேன்‌. பெரும்பாலும் பார்வையற்றவர்கள் ஆகிய நாங்கள் வாக்குச்சாவடிக்கு செல்லும்போது கண் தெரியாதவர் வருகிறார் ஒதுங்கிக்கொள்ளுங்கள் என்று யாராவது எங்கள் மீது பரிதாபப்பட்டு வழி விடுவார்கள்.

  சிலர் வரிசையில் நின்று போடு எங்களுக்கும் வேலை இருக்கிறது எனக்கூறுவார்கள். அந்த வகையில் முண்டியடித்துக்கொண்டு சென்று தான் நாங்கள் ஜனநாயக கடமையாற்ற வேண்டிய நிலைமை இருந்தது. ஆனால் கடந்த பாராளுமன்ற தேர்தலில் இருந்து எங்களுக்கு இங்கு தனி வாக்கு சாவடி அமைத்து கொடுத்து இருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை முதல் முறையாக தனி வாக்கு சாவடியில் இப்போது நாங்கள் வாக்களித்துவிட்டு வந்திருக்கிறோம் எங்களுக்கு தனி வாக்கு சாவடி அமைத்து கொடுத்த அரசுக்கு நன்றி.

  இவ்வாறு அவர் கூறினார்.

பார்வையற்ற பெண்கள்  

  இதேபோல மாரியம்மாள், செல்வி என்ற இரண்டு பார்வையற்ற பெண்களும் தங்களது உதவியாளர்களுடன் வந்து வாக்களித்து விட்டு சென்றனர். அவர்களும் பார்வையற்றவர்களுக்கு தனி வாக்கு சாவடி அமைத்து கொடுத்திருப்பது ஓட்டு போடுவதற்கு வசதியாக இருந்தது எனக்கூறினார்கள்.

மேலும் செய்திகள்