வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலைமறியல்; அந்தியூர் அருகே பரபரப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது அந்தியூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2021-04-07 00:31 GMT
அந்தியூர்
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது அந்தியூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.
சாலை மறியல்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட எண்ணமங்கலம் வாக்குச்சாவடியில் நேற்று காலை 7 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கி நடந்து கொண்டிருந்தது. இந்தநிலையில் எண்ணமங்கலம், கோவிலூர் பகுதியை சேர்ந்த சிலர் திடீரென எண்ணமங்கலம் பஸ் நிறுத்தம் முன்பு நேற்று பகல் 11 மணி அளவில் ஒன்று திரண்டனர்.
அப்போது அந்த வழியாக அந்தியூரில் இருந்து எண்ணமங்கலம் நோக்கி சென்ற அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர். பின்னர் பொதுமக்கள் ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வாக்காளர் பட்டியலில்...
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு் பழனிசாமி மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்ைத நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறும்போது, ‘தங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. ஆனால் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று கூறி வாக்குப்பதிவு செய்ய அதிகாரிகள் மறுத்து விட்டனர். எங்களையும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்’ என்றனர்.
அதற்கு அதிகாரிகள், ‘வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம் 3 முறை நடைபெற்றது. அப்போது சரிபார்க்காமல் விட்டுவிட்டு் தற்போது வந்து சாலை மறியலில் ஈடுபடுவது தவறு. தற்போது நீங்கள் ஓட்டுப்போட முடியாது. அடுத்த தேர்தலில் ஓட்டுப்போட தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ளுங்கள்’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். சிறைபிடிக்கப்பட்ட பஸ்சையும் விடுவித்தனர். இதனால் எண்ணமங்கலம் ரோட்டில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்