கோட்டூர் மலை கிராமத்திற்கு சாலை வசதி கோரி பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு

கோட்டூர் மலை கிராமத்திற்கு சாலை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-04-07 00:49 GMT
தர்மபுரி:
 கோட்டூர் மலை கிராமத்திற்கு சாலை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மலை கிராமங்கள்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் கோட்டூர் மலை, ஏரிமலை, அலகட்டு ஆகிய 3 மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்களுக்கு சாலை வசதி இல்லாததால் போக்குவரத்து வசதி இன்றி பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். கோட்டூர் மலையில் 336 வாக்காளர்கள் உள்ளனர். ஏரிமலையில் 327 வாக்காளர்கள் உள்ளனர். 
இந்த மலை கிராமங்களில் தேர்தல் வாக்குப்பதிவுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சுமார் 6 கிலோமீட்டர் தொலைவிற்கு கழுதைகள் மூலம் நேற்று முன்தினம் எடுத்து செல்லப்பட்டன. இந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை வசதி உஎள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை வசதி
இதுபற்றி தகவல் அறிந்ததும் பென்னாகரம் தேர்தல் நடத்தும் அலுவலர் தணிகாசலம் மற்றும் அதிகாரிகள் அலக்கட்டு, ஏரிமலை கிராமங்களுக்கான வாக்குச்சாவடி அமைந்துள்ள ஏரிமலையில் வாக்குப்பதிவை தொடங்க வலியுறுத்தி ஏரிமலை அடிவார பகுதிக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மலை கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்த வேண்டும். அலக்கட்டு முதல் சீங்காடு வரை 7 கி.மீ. தொலைவிற்கு 100 நாள் வேலை திட்ட பணி மூலம் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இந்த கிராமங்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மலை கிராம மக்கள் வலியுறுத்தினார்கள். உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து ஏரிமலை வாக்குச்சாவடியில் நேற்று பகல் 11 மணிக்கு மேல் வாக்குப்பதிவு நடைபெற்றது.
தேர்தல் புறக்கணிப்பு
இதேபோல் சாலை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட கோட்டூர் மலை பொதுமக்களிடம் பென்னாகரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தணிகாசலம், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன், வனச்சரகர் செல்வம் ஆகியோர் நேற்று மாலை வரை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.  கோட்டூர் மலை வாக்குச்சாவடியில் பொதுமக்கள் தேர்தல் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்